Thursday, June 9, 2011

கந்தா - எங்க ஊர்க்காரரு இயக்குன படமுங்கோ...

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் பரபரப்பாவேத்தான் இருக்கு. காரசாரமான அந்த விஷயங்களைப் பற்றி பதிவு எழுத நேரம் இல்லாத அளவுக்கு நானும் பரபரப்பாயிட்டேன்.





பசித்திருப்பவனிடம் எந்த போதனையும் எடுபடாதுன்னு பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க. அது உண்மையும் கூட. எனக்கு ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடி தினமலர் நாளிதழ்ல வேலைக்கு சேர்ந்த நாட்கள்ல அதிகமா உணர ஆரம்பிச்சேன். அதுக்கு காரணம் நான் இது நாள் வரை வேலை செய்த இடங்களில் சம்பளம் ஒழுங்கா வருதோ இல்லையோ நான் கற்று வெச்சிருந்த எலக்ட்ரீஷியன் வேலை மூலமாகவும், பத்திரிகைகளில் பிரசுரமாகும்  துணுக்கு, சிறுகதை, கட்டுரை போன்றவற்றாலயும் பணப்புழக்கத்துக்கு குறைச்சல் இல்லை.

ஆனால் தினமலர் நாளிதழ்ல பக்க வடிவமைப்பாளரா சேர்ந்ததும் சாப்பிட, குளிக்க, துணி துவைக்க கூட உருப்படியா நேரம் கிடைக்கலை. அப்புறம் எங்க எலக்ட்ரீஷியன் வேலை பார்க்குறது. எழுத்தைப் பத்தி கேட்கவே வேண்டாம்.

நாலா பக்கமும் (?!) வந்த வருமானம் நின்னு போன உடனே எப்படா ஒண்ணாம் தேதி வரும்னு ஆயிடுச்சு. இருந்த பொருளாதார நெருக்கடியில சம்பளம் வாங்குன அடுத்த அஞ்சாவது நிமிஷமே அடுத்த ஒண்ணாம் தேதிக்கு இன்னும் 4 வாரம் இருக்கான்னு மலைப்பு வந்தா விளங்குமா?

அப்பவே முடிவு பண்ணிட்டேன். நமக்கு சொந்த தொழில்தான் லாயக்குன்னு. அரசு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் திருவாரூருக்கு வந்த நேரம் 50 சதுரடி கடைக்கு கூட 1 லட்ச ரூபாய் அட்வான்ஸ், 2ஆயிரம் ரூபாய் வாடகைன்னு உயர்ந்துடுச்சு.

இந்த அளவு அட்வான்ஸ் கொடுக்க கூட பணம் சேமிச்சு வெக்கலையேன்னு இப்பதாங்க என்னையே நான் திட்டிகிட்டேன். ரெண்டு மூணு இடத்துல மாடிப்படிக்கு கீழே (மாடிவீட்டு மாது?) ஒதுங்குற இடத்தை வாடகைக்கு பேசிப்பார்த்தேன். பல வருஷமா பூட்டிக்கிடந்த இடத்தை நான் போய் கேட்டதும் பக்கத்து கடையில இருந்தவங்க அவசர அவசரமா போய் பிடிச்சு பெயிண்ட் அடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுத்துகிட்டு இருக்காங்க. நிறைய பேர் ஒரு கடையை நடத்திகிட்டு ஒண்ணு முதல் மூணு கடைகளை புடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுத்துகிட்டு இருக்காங்க.

சிலர் அந்த கடைகளைக்காட்டி வங்கிக்கடன் வாங்க பயன்படுத்துறதா தெரியுது. மற்றவங்க சம்பாதிக்க கூடாதுன்னு நினைச்சு கூட சிலர் மேலும் சில கடைகளை புடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுக்கலாம்னு நினைக்குறேன். இப்படியும் சின்ன புத்தி இருக்கு.

இந்து மதத்துல எவ்வளவோ நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. ஆனா அதுக்கு ஒரு சீரியல் கதாபாத்திரத்துக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை கூட கொடுக்குறதா தெரியலை.

ஜப்பான்ல சுனாமி, பூகம்பத்தால அடுத்த வேளை சோத்துக்கே நிச்சயமில்லாத நிலமை வந்தப்ப கூட எனக்கு இந்த வேளை சாப்பாடு போதும். மீதத்தை வேற யாருக்காவது கொடுங்க. எனக்கு அடுத்த வேளை சாப்பாடு வேற எங்கயாவது கிடைக்கும்னு சொல்ற மக்கள் இருக்காங்க.

இந்த கடை விஷயத்தை பார்த்ததும் நம்ம நாட்டுல அப்படி ஒரு நிலமை ஏற்பட்டா என்ன நடக்கும்னு யோசிச்சேன். இப்ப நடக்குற ஊழல், லஞ்சம் இதெல்லாமே மற்ற மக்களைப் பத்தி கவலைப்படாம முழுக்க முழுக்க சுய நலத்தை மட்டுமே விரும்புற மக்களோட மன நிலையை வெளிக்காட்டுற விஷயங்கள்தான்.

குறைவான அட்வான்ஸ்-வாடகையில இடம் தேடி அலைஞ்சு கம்ப்யூட்டர் சேல்ஸ், சர்வீஸ் செய்த நண்பர் ஒருத்தரோட கடையில என்னுடைய கம்ப்யூட்டரை எடுத்துட்டு போய் வெச்சு ஒரு மாசம் ஜாப் டைப்பிங் செய்து கொடுத்தேன்.

ஆனா எழுத்தாளராக தனிமை அவசியம். அதான் தனி இடம் பார்த்து ஜூன் 5ஆம் தேதி வந்துட்டேன். இனியாவது அப்பப்போ ப்ளாக்ல எழுதணும்னு நினைக்குறேன். ஆனா சோம்பல் புத்தி அப்பப்ப வந்து எட்டிப்பார்க்குதே.

சொந்தக்கதை, புலம்பலை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு இந்த பதிவுல சொல்ல வந்ததை எழுதிடுறேன்.

நான் ஏழாம் வகுப்பு படிச்ச சமயத்துல ராணி வார இதழ்ல ஒரு பக்க கதை ஒண்ணு. அதை எழுதியவர் பெயர் திருவாரூர்பாபுன்னு போட்டிருக்குறதா என் நண்பன் சொன்னான்.

அதுல இருந்து முழு அளவுல எந்த புத்தகத்தையும் படிக்கலைன்னாலும் (பாடப்புத்தகத்தையும் சேர்த்துதான்) எழுத்தாளர்களின் பெயர்களை கவனித்து ஓரளவு கதைகளை படிக்க ஆரம்பிச்சேன்.

அந்த வகையில இப்ப சில பத்திரிகைகள்ல ''திருவாரூர் சரவணன்'' அப்படின்னு நான் எழுதுன கதைகள் வர்றதுக்கு முக்கிய தூண்டுதல்னு திருவாரூர் பாபுவை சொல்லலாம். அவரும் திருவாரூர் அரசுக் கல்லூரியில் பி.காம் படித்ததாக புரொபசர் சொன்னார்.(நானும் அதே கல்லூரியில் அதே டிபார்ட்மெண்ட்தான்)

சரண் இயக்கத்தில் ஜே ஜே, வசூல்ராஜா M.B.B.S, அட்டகாசம் அப்படின்னு சில படங்கள்ல உதவி இயக்குனரா பணியாற்றிய அவர் 'கந்தா' ன்னு ஒரு படத்தை கரண், ராஜேஷ், மித்ரா (காவலன் படத்துல விஜய்யை முதல்ல கல்யாணம் பண்ணிக்கிற அதே மித்ராதான்), விவேக் ஆகியோரை வெச்சு இயக்கியிருக்கார்.

இந்தப்படம் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸ் னு சொன்னாங்க.

எனக்கு இந்த பேனர் கலாச்சாரம் எல்லாம் பிடிக்காது. ஆனா எனக்குத்தெரிஞ்சு திருவாரூர்ல இருந்து போய் தமிழன் எக்ஸ்பிரஸ்ல வேலை பார்த்து சரண் கிட்ட உதவி இயக்குனரா இருந்து ஒரு படத்தை டைரக்ட் செய்த பாபு K.விஸ்வநாத் என்ற திருவாரூர் பாபுக்கு சின்னதா ஒரு பேனர் வெக்கலாம்னு தோணுது.

அந்த பேனர்ல 30 சதவீத அளவுக்கு இப்ப நான் வெச்சிருக்குற ஜாப் டைப்பிங் சென்டர் பேரையும் டிசைன் பண்ணிட்டா கொஞ்ச நாளைக்கு அந்த போர்டையே பெயர்ப்பலகையா பயன்படுத்திக்கலாம்னு ஒரு ஐடியா.

பாபு.கே.விஸ்வநாத் அவர்களை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. ஆனா அவரது தந்தை, சகோதரர்கள் ஆகியோரை எனக்கும் தெரியும். அவர்களுக்கு என்னையும் தெரியும்.

அவரது தந்தை இரா.விஸ்வநாதன் சுதந்திரப்போராட்ட தியாகி. எனக்கு பத்து வயது இருக்கும்போது அவரிடம் பேசியிருக்கிறேன். அதிர்ந்து கூட பேச மாட்டார். எல்லாரிடத்தும் அவ்வளவு இனிமையாக பழகும் அவர் தற்போது மறைந்து விட்டதால் அவரது நினைவுகளுடன் தான் பாபு.கே.விஸ்வநாத் இயக்கிய படம் வெளியாகப்போகிறது.

ஆனால் இப்போது வரை திருவாரூரில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் இல்லை. இயக்குனர் ஷங்கர் திருவாரூரில் ஒரு தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அந்த தியேட்டருக்குதான் வரும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

எண்ணப்படி எல்லாம் விரைவில் நடந்தேற வாழ்த்துக்கள்!

சரண் said...

Hai Angel, Thankyou For ur all comment

Post a Comment

உங்களுக்குத் தோணுறத எழுதிட்டுப் போங்க...

இதுவும் இளையபாரதத்துலதாங்க...

Related Posts with Thumbnails