Share

Wednesday, July 20, 2016

நண்பன் - சிறுகதை - மணிரத்னம் – தினமணி சிறுகதைப்போட்டி முடிவுகள்

ரஜினி, கமல் போன்றோரை வைத்து மசாலா படங்களாக எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்த படங்களில் டைட்டிலின்போது கதை வசனம் - பஞ்சு அருணாச்சலம் அல்லது வேறு யார் பெயரையாவது பார்க்க முடியும்.
கே.எஸ்.ரவிகுமார் படங்களில் கூட கதை வசனம் ஈரோடு சௌந்தர், கமலேஷ்குமார் என்ற பெயர்களை அவ்வப்போது பார்க்க முடியும். ஏன், கமலஹாசன் கூட (தன் படங்களில் முழு தலையீடு இருந்தாலும்) டைட்டிலில் கதை, வசனம் என்று அனந்து, கிரேசிமோகன் உள்ளிட்ட சில பெயர்களை அவ்வப்போது காண முடிந்தது.
அதெல்லாம் ஒரு காலகட்டம் 

அதன்பிறகு பல படங்களில் எழுத்து இயக்கம் என்று மட்டும் டைட்டில் போட்டார்கள். இந்த மாதிரி டைட்டில் போடும் வழக்கம் ஆங்கிலப் படங்களில் இருந்து சுட்டிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது பல படங்களே சுட்ட கதைதான். அது மட்டுமல்ல... கதைன்னு ஒருத்தர் பேரைப் போட்டுட்டா பிறகு ரீமேக் ரைட்ஸ் விற்கும்போது கதாசிரியருக்கும் பங்கு கொடுக்கணும். இது மாதிரி ஆயிரம் விஷயங்கள் இருக்கு, அது புரியாம என்னய்யா நீ இன்டர்நெட்ல புழங்குற என்று ஒருவர் என் மண்டையில் குட்டினார்.

//////////////////////காற்று வெளியிடை, மணிரத்னத்தின் முதற்படமான பல்லவி அனுபல்லவி படத்தின் ரீமேக் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதுவரை மகாபாரத ராமயன உல்டாக்கள் எடுத்துக்கொண்டிருந்தவர் தனது உல்டாவையே மீண்டும் எடுக்கப்போகிறாராம்.
-அவ்வ்வ்வ்வ்வ் அந்தளவுக்காடா "தேஞ்சு "போயிட்டிங்க///////////////////////////////////////
இப்படி ஒரு தகவல் நான் ஏதோ ஒரு முகநூல் பக்கத்தில் படித்தேன். இது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கதை எழுதும் பலர் ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா சொன்னதாக ஒரு பத்திரிகையில் சமீபத்தில் படித்தபோது உண்மை என்றே தோன்றியது.
ஏனென்றால் ஊழலை ஒழிப்பது என்ற ஒரே ஜானரில்தான் ஷங்கர் தன் படங்களை எடுத்து ஹிட்டடித்தார். அந்நியன் படத்துக்கு பிறகு அவர் கையிலிருந்த அட்சய பாத்திரம் காலியானது போல் எனக்கு ஃபீல் வருகிறது. (மற்றவர்களுக்கு எப்படியோ?) 
மற்றவர்கள் எழுதுவதை ஆராய்வது பிறகு இருக்கட்டும். நான் எழுதுவதை சற்று திரும்பிப் பார்க்கலாம் என்று யோசித்தேன். சுஜாதா சொன்னது போல் ஒரே கதையை திரும்பத்திரும்ப எழுதவில்லை என்றாலும் என்னைச் சுற்றி கண்ணுக்குத்தெரியாத ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதைத் தாண்டி வெளியில் நான் வந்து எழுதவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
அது தவிர, ஒவ்வொரு ஆண்டும் தினமலர், தினமணி, கல்கி சிறுகதைப்போட்டிகளுக்கு அவசர அவசரமாக எழுதி அனுப்பிய கதை பிரசுரம் ஆகவில்லை என்றால் மீண்டும் அடுத்த ஆண்டு இந்த மூன்றில் ஏதாவது ஒரு பத்திரிகைக்கு மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தேன். இப்படி நான் எழுதிய கதைகள் என்னுடைய வலைப்பூவில் கூட அச்சேறாமல் என் கணிணிக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு தற்சமயம் கற்பனை வறட்சி ஏற்பட்டதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

சில தினங்களுக்கு முன்பு தினமணி-நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் 2016ல் பரிசு பெற்ற கதைகளின் பட்டியல் பார்த்தேன். வழக்கம்போல் 16 வது ஆண்டாக நான் எழுதிய கதைகளில் ஒன்று கூட தேர்வு பெறவில்லை. அவற்றை இனி அடைகாத்து மீண்டும் மீண்டும் வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பாமல் இணையத்தில் பதிவேற்றிட நினைத்திருக்கிறேன். அப்படி செய்தால்தான் புதிது புதிதாக யோசித்து எதையாவது எழுத முடியும். தற்சமயம் நான் 2012ஆம் ஆண்டில் தமிழகத்தில் மின்வெட்டு உச்சத்திலிருந்த நேரத்தில் எழுதிய கதையை மீண்டும் வலையேற்றிருக்கிறேன்.
----------------------------------------------
பல காரணங்களால் புதியதாக புனைவுகள் எழுதுவதை நிறுத்தியிருந்த நான், மின்வெட்டு காரணமாக கிடைத்த நேரத்தில் நண்பன் என்ற தலைப்பில் சிறுகதை எழுதியிருந்தேன். கதையை எழுதி 8 மாதங்கள் இருக்கும். இப்போது தீபாவளிக்குப் பிறகு தேவி வார இதழுக்கு அனுப்பி வைத்த கதை 12-12-2012 தேவி வார இதழில் 8 பக்கத்துக்கு பிரசுரமானது. தமிழ் என்பவர் வெகு அழகாக ஓவியம் வரைந்திருக்கிறார். தேவி ஆசிரியர் குழுவுக்கும், ஓவியருக்கும் நன்றி. எவ்வளவுதான் வலைப்பூவில் நம் இஷ்டத்துக்கு எழுதினாலும் அச்சில் ஏறும் எழுத்துக்கள் நம் மனதுக்கு தரும் ஊக்கம் தனிதான்.
எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதிய "எப்படி கதை எழுதுவது?" என்ற புத்தகத்தில் அவர் முக்கியமாக வலியுறுத்தியிருந்த உத்தி, முதல் பாராவிலேயே கதையை தொடங்கி விடுங்கள் என்பதுதான். நான் அப்படி எழுதிய கதைகள்தான் பெரும்பாலும் பிரசுரமானதுடன் பல பரிசுகளையும் பெற்றுத்தந்திருக்கின்றன.
ஆனால் நான் அனுப்பிய நண்பன் என்ற இந்த கதையில் கிட்டத்தட்ட பத்து பாராக்களை தூக்கிவிட்டு பதினோராவது பாராவில் இருந்துதான் தேவி இதழில் பிரசுரம் செய்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது கதை தொடங்கும் இடத்தில் இருந்து சரியாகத்தான் பிரசுரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
இவ்வளவுக்கும் நெடுந்தொடர் எதையும் நான் பார்ப்பதில்லை. (கதை எழுதிய காலத்தில் மின் வேட்டு காரணமாக தாய்க்குலங்களும் அழுகாச்சி சீரியல்களை பார்க்க முடியாத கதையை தனி மெகா சீரியலாக எடுக்கலாம்.) பிறகு ஏன் கதைக்கு அவசியமில்லாத 10 பாராக்களை அப்படியே வைத்து அனுப்பினேன் என்ற கேள்வி என் மனதை குடைந்தது.
1. வலைப்பூவில் இஷ்டத்துக்கு எழுதுவதன் காரணமாக ஏற்பட்ட அலட்சியம்.
2. முன்பு பேப்பரில் நாலைந்து முறை எழுதி, திருத்தி, மீண்டும் எழுதி நகல் எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பியபோது எடுத்துக்கொண்ட அக்கறையை, கணிணியில் டைப் செய்து அனுப்பும்போது காட்ட முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், கணிணியில் பிழைப்பை பார்க்கவே மின்சாரம் கிடைப்பதில்லை. இதில் எங்கே கதையை வெட்டி, ஒட்டி ட்ரிம் செய்வது?
3. மனதில் நினைப்பதை எல்லாம், வாழ்வில் கிடைத்த அனுபவம் என்று எல்லாவற்றையும் வலிந்து கதையில் திணிக்க நினைத்தால் இதுபோல் ஆகிவிடுகிறது.
 எனக்கு முக்கியமாக இந்த மூன்று காரணங்கள்தான் தோன்றின.
 நான் வளவளவென்று எழுதிய கதை இங்கே இருக்கிறது. புத்தகத்தில் பிரசுரமான கதை ஸ்கேன் செய்து இமேஜ் பைலாக.
 -----------------------------------------------------------------------
நண்பன் - சிறுகதை
 1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்:
திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.
"டேய்...வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா...­ங்கர் டைரக்­ன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்...தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா...'' என்றான் வடிவேல்.
"ச்சே...நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா ஏ/சி, குடந்தை விஜயா ஏ/சி, மாயவரம் விஜயான்னு போட்டிருக்கு. மூணு ஊர்லயும் ஒரே தியேட்டரா பார்த்து படத்தை குடுத்துருக்காங்க.''என்ற மற்றொரு சிறுவனான பிரசாத்தின் பேச்சில் வியப்பு தெரிந்தது.
"அது வேற ஒண்ணும் இல்லடா...இந்த விஜயா தியேட்டர் எல்லாம் படத்தை திருச்சி ஏரியாவுல டிஸ்ட்ரிபியூட் பண்ற முருகன் பிக்சர்ஸ் காரங்களோடதுதான் . அதுனாலதான் அவங்க தியேட்டர்லயே ரிலீஸ் பண்றாங்க.''
 "இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?'' என்று பிரசாத் கேட்கவும்,
வடிவேல் முகம் நிறைய பெருமையுடன், ""சோழா தியேட்டர்ல ஆப்ரேட்டரா இருக்குறவர் என் பிரண்டு வீட்டு மாடியிலதான் குடியிருக்கார். அவருதான் இந்த செய்தியயல்லாம் சொல்லுவாரு. ம்ப்ச். என்ன...இந்தியன் படம் தைலம்மையில வராம சோழா தியேட்டர்ல வந்துருந்தா நான் க்யூல நின்னு டிக்கட் வாங்காம அவரோடயே நேரே உள்ள போயி....'' என்று பேசி முடிக்கும் முன்பே முதுகில் அடி விழுந்தது.
வடிவேல் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி கடைக்குள் வீசிவிட்டு அவன் முதுகில் கிருஷ்ணமூர்த்தி மத்தளம் வாசித்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயராமன், பதறிப்போய் சைக்கிளை விட்டு இறங்கினார். வடிவேலுடன்  நின்றுகொண்டிருந்த பிரசாத் திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான்.
இந்த பாரா வரை தேவி இதழில் பிரசுரம் செய்தபோது கத்திரி போட்டுவிட்டார்கள். (சரியான செயல்தான்- வாசிப்பு பழக்கம் காணாமல் போய் மக்கள் தொலைக்காட்சியில் மூழ்கிய காரணத்தால் படிப்படியாக மங்கி  மறைந்துபோன இதழ்களில் தேவி வார இதழும் ஒன்று.)
----------------------------------------------------
"அப்பா...அடிக்காதீங்கப்பா...பேப்பர் படிச்சா என்னப்பா தப்பு...'' என்று அலறியதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி தன் மகனை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்.
"யோவ் கிருஷ்ணமூர்த்தி, அவன் உடம்பு என்ன இரும்பா...இந்த அடி குடுத்து புரட்டி எடுக்குற?'' என்று ஜெயராமன் அடிவாங்கிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஆதரவாக பேசவும், அவன் வந்து இவர் பின்னால் ஒளிந்தான்.
"உனக்கு விஷ­யம் தெரியாது கிருஷ்ணமூர்த்தி. ஒரு வீட்டுல எல்லா புள்ளையும் ஒரே மாதிரி இருக்காதுன்றது சரியாப்போச்சு. இவனுக்கு மூத்த பிள்ளைங்கள்ல  ஒருத்தன் பதினொன்னாவது படிக்கிறான். இன்னொருத்தன் ஒன்பதாவது படிக்கிறான். அவனுங்க பாடப்புத்தகத்தை தவிர வேற எதையும் புரட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க. ஆனா இவன் எந்த நேரத்துல பொறந்தான்னே தெரியலை.
யார் வீட்டுல கதைப்புத்தகத்தைப் பார்த்தாலும் எடுத்து வெச்சுகிட்டு உட்கார்ந்துடுறான். இப்ப புதுசா பேப்பர் படிக்க எங்க போய் பழகுனான்னு தெரியலை. ஏழாவது படிக்கிறதுக்குள்ள எந்த தியேட்டர்ல என்ன படம்...அந்த தியேட்டருக்கு யார் முதலாளின்னு ஆராய்ச்சி பண்றது உருப்புடுறதுக்கா...
அப்புறம் என்னை மாதிரி ஏதாவது துணிக்கடையிலேயோ, மளிகைக்கடையிலேயோ கூலி வேலை பார்க்குறதுலேயே ஆயுசு போயிடும். இதை இவனுக்கு எப்படி புரிய வெக்கிறது?'' என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.
"சின்ன பையனுக்கு என்னய்யா தெரியும்...கொஞ்ச நாளானா சரியாயிடுவான். பள்ளிக்கூடத்துல சரியா படிக்காம இப்படி கண்டதையும் படிச்சா தப்பு. ஆனா கிளாஸ்லேயே நானூறு மார்க் எடுக்குற ஒரே ஆள் உன் புள்ளை தான்னு நீயே சொல்லியிருக்க.''என்று ஆறுதலாக பேசினார் ஜெயராமன்.
"பாடப்புத்தகத்தை ஒழுங்கா படிச்சா நானூத்தம்பதுக்கு மேல எடுக்கலாம்னுதானே இந்த கருமத்தையயல்லாம் படிக்காதேன்னு சொல்றேன்.''
அவ்வளவு அடி வாங்கியும் வடிவேல், "படிச்சா என்ன தப்பு' என்றுதான் சொன்னானே ஒழிய இனிமே இப்படி செய்யமாட்டேன் என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வரவே இல்லை.
இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உணர்ந்த ஜெயராமன்,  "ரொம்ப அடிக்காதய்யா...பயந்துடப்போறான்'' என்று கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்த பார்த்தார்.
"எது...இதுவா பயப்படப்போகுது'' என்று சொன்னவாறே வடிவேலை எட்டி உதைக்க கிருஷ்ணமூர்த்தி முயற்சித்தபோது, சட்டென்று வடிவேல் நகர்ந்துவிட்டான். இதை எதிர்பார்க்காமல் கீழே விழப்போன கிருஷ்ணமூர்த்தியை ஜெயராமன் தாங்கிப்பிடித்தார்.
"எதுவா இருந்தாலும் வீட்டுல வெச்சுக்க...இப்போ உன் மானம்தான் போகுது. கெளம்புப்பா...'' என்று ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியை ஒருவழியாக புறப்பட வைத்தார்.
"வீட்டுல, வெளியில, கடையிலன்னு என்கிட்ட இவன் எங்கதான் உதை வாங்கல...ஆனாலும் திருந்த மாட்டெங்குறான். மூணுல ஒண்ணை கோயிலுக்கு நேர்ந்து விட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான். எல்லாம் தலைவிதி. அப்புடி இந்த பேப்பர்ல என்னதான் இருக்கு? ஒண்ணு கொலையைப் பத்தி போடுறாங்க. இல்ல கொள்ளை. அதை விட்டா சினிமா. இதைப் படிச்சுகிட்டே இருந்தா சோறு போடுமா? நான் படிக்கும்போதும் சரி. இப்பவும் சரி. பேப்பரை பார்த்தாலே பத்திகிட்டு வருது.'' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சென்றுவிட்டார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் ஜெயராமன் சில காலம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு அருகில் குடியிருந்தபோது பழக்கம்.
"நாளைக்கே உடம்பு முடியாம படுத்துட்டா அந்த ஜவுளிக்கடையில இருந்து மொத்தமா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இவனுங்களை கடன் வாங்கி பெரிய படிப்பு வைக்க முடியுமா? நல்ல மார்க் எடுத்துட்டா பணம் குறைவா இருக்குற காலேஜ்ல சேர்த்துடலாம். மூத்தவனுங்க ரெண்டு பேரும் என் பேச்சை கேட்டு ஒழுங்கா படிக்கிறாங்க. சின்னதுதான் தறுதலையா நிக்கிது' என்று அடிக்கடி ஜெயராமனிடம் கிருஷ்ணமூர்த்தி புலம்புவார்.
"வடிவேலு நல்லாத்தான் படிக்கிறான். அது போதாதுன்னு அவனை கரிச்சு கொட்டிகிட்டே இருக்காரு...' என்று கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கனகவள்ளி  மகனை விட்டுக்கொடுக்காமல் பேசுவாள்.
ஆனால் யாருடைய சமாதானமும் கிருஷ்ணமூர்த்தியிடம் எடுபடாது.
+++
ஜெயராமன் பணிபுரிந்த நிறுவன முதலாளிக்கு காரைக்குடியில் ஒரு கிளை இருந்தது. அங்கே பொறுப்பான ஆள் தேவைப்படவே, ஜெயராமன் காரைக்குடிக்கு ஜாகையை மாற்றினார். ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.
வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு, மருமகளுக்கு அவரை தங்களுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல் போய்விடவே, ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தாள். அவர் மகனும் தன் மனைவியை கண்டிக்கவே இல்லை.
இவருக்குதான் ரோ­ஷம் அதிகம் ஆயிற்றே. மனைவியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு வந்துவிட்டார்.
+++
2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் அதிகாலையில் பனிபொழியும் நேரம்:
டீக்கடை, சலூன் என்று எங்காவது வடிவேலு பேப்பர் படிப்பதை பார்த்தால் விரட்டி விரட்டி அடித்து துரத்திய கிருஷ்ணமூர்த்தியை 16 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த நிலையில் ஜெயராமன் எதிர்பார்க்கவே இல்லை.
திருவாரூர் பெரிய கோவிலில் மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி பூஜை முடிந்ததும் தியாகராஜர் சன்னதியை விட்டு பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உள் பிரகார வாசலில் வழக்கம்போல் வெண்பொங்கல் பிரசாதம் வினியோகம் நடந்துகொண்டிருந்தது. ஜெயராமன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டார். வெறும் கையில் பொங்கலை வாங்கிய சிலர் சூடு தாங்காத காரணத்தால் உள்ளங்கையில் அந்த பொங்கலை பந்து போல் உருட்டி சமாளித்துக் கொண்டிருந்தனர்.
இதே மாதிரி நடக்கும்னு எதிர்பார்த்துதானே நான் வீட்டுல இருந்து பிளாஸ்டிக் பை எடுத்துட்டு வந்தேன் என்று நினைத்தபடி இரண்டாம்பிரகாரத்தில் வலம் வந்த ஜெயராமனின் முகத்தில் சில்லென்று ஊசி குத்துவது போல் பனிச்சாரல் அடித்தது. நான்கு அடி தூரத்துக்கு அப்பால் வந்தவர்களின் முகம் தெரியவில்லை. காதுக்குள் காற்று நுழையாதவாறு மப்ளரை சுற்றியிருந்தாலும் அதை மீறி குளிர் தாக்கியதால் மீதமிருந்த ஒன்றிரண்டு பற்கள் மோதிக்கொண்டன.
கொஞ்ச நேரம் பேப்பர் படிச்சுட்டு கிளம்பினா ஓரளவுக்கு பனிமூட்டம் விலகிடும் என்று நினைத்தவாறே கோயில் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள நூலக அறைக்குள் நுழைந்தார் ஜெயராமன். அங்கே அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் வியப்பில் வாய்பிளந்துவிட்டார்.
"அய்யா...கிருஷ்ணமூர்த்தி...என்னைத்தெரியுதா?''என்று கேட்டவாறு அருகில் வந்த ஜெயராமனை அவர் ஏறிட்டு பார்த்தார்.
"அடடே...என்னப்பா ஜெயராமா...ரொம்ப வருஷ­மா ஆளையே காணோம்...நான் தினமும் கோயிலுக்கு வர்றேன் உன்னைப் பார்க்கவே இல்லையே...''என்று கிருஷ்ணமூர்த்தியின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
அருகில் இருந்து நாளிதழ்கள் படித்துக்கொண்டிருந்த மற்ற வாசகர்கள் சட்டென்று இவர்களைப் பார்த்தார்கள்.
"சாரிங்க...''என்று கிருஷ்ணமூர்த்தி அந்த நூலகத்திலிருந்தவர்களைப் பார்த்து சொல்லி விட்டு, கமலாம்பாள் சன்னதிக்கு செல்லும் வழியில் கோயில் அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கை போன்ற அமைப்பில் வசதியாக ஜெயராமனுடன் அமர்ந்தார். இப்போதும் பனி மெல்லிய சாரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது.
"என்ன ஜெயராமா...காரைக்குடிக்கு போனதுக்கு அப்புறம் ரெண்டு வரு­ஷம் கடிதம்  போட்ட. அப்புறம் சுத்தமா தொடர்பே இல்லையே...என்னாச்சு.'' என்ற கிருஷ்ணமூர்த்தியின் குரலில் பழைய சிநேகிதனை மீண்டும் பார்த்த ஆர்வம் தெரிந்தது.
"ம்ப்ச்...அதை ஏம்பா கேட்குற...மருமகளுக்கு நாங்க இருக்குறது புடிக்கலை போலிருக்கு. நடந்தா தப்பு. உட்கார்ந்தா தப்புன்னு ஒரே இம்சை. டாய்லட்ல தண்ணி ஊத்தலைன்னு மகன் கிட்ட புகார் செய்யுறா. இதுக்கு மேல அவமானம் தேவையான்னு இங்கேயே வீடு பார்த்து பொண்டாட்டியோட வந்துட்டேன்.
ஆர்டிஆர் கம்பெனியில வேலைக்கும் சேர்ந்துட்டேன். மார்கழி மாசத்துல ஒரு நாள் காலையில மரகதலிங்க தரிசனம் பார்க்கணும்னு ஆசை. வந்துட்டேன். நாளைக்கெல்லாம் எழுந்து வர முடியாது போலிருக்கு. ஏழு மணிக்கு வேலை முடிஞ்சிடும். வீடு எங்க அதே இடம்தானே. முடிஞ்சா வர்றேன். இனி எங்க உயிர் போறது இந்த ஊர்லதானே'' என்று பேசிய ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.
"பொழுது விடிஞ்ச நேரத்துல இது என்ன பேச்சு. நாங்க இருந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டுட்டு கீழே நாங்க வந்தா போனா தங்குறதுக்கு வச்சிருக்கோம். இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்பேன். வர்றதுன்னா, போன் பண்ணிட்டு வா.''என்று ஒரு துண்டு சீட்டில் நம்பரை எழுதிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.
"நீங்களும் இந்த ஊர்ல இல்லையா. அது கெட்டுச்சு போ. எங்க சென்னையா?''
"எப்படிப்பா கரெக்டா சொல்ற?''
"நம்ம ஊர்ல இருந்து சென்னைக்கு போனது போக மிச்சம்தானே வேற ஊர்களுக்கு போறது. அது சரி...நீ மட்டும்தான் வந்துருக்கியா. மனைவி, பிள்ளைங்க எல்லாம்?''
"மனைவி தவறி ஆறு வருஷ­ம் ஆயிடுச்சு. பையன் மனைவியோட பத்து நாள் டூர் போயிருக்கான். நான் இங்க வந்துட்டேன்.''
"அடடா...கனகவள்ளி இறந்த வி­ஷயம் எனக்கு தெரியலையே. பத்து நாள் டூர் போற புள்ள உன் ஒரு ஆளை இப்படியா மார்கழி மாச குளிர்ல தவிக்க விட்டுட்டு போறது? அது சரி...உனக்கு மூணு புள்ளைங்களாச்சே. ஒருத்தன் டூர் போயிருக்கான்னா மத்தவங்க? மூணு பேரும் நல்லாத்தானே இருக்காங்க. சின்னவன் உருப்படியா எதாவது வேலைக்கு போறானா?''
"அது பெரிய கதை. மூணு பசங்களுமே இஞ்சினியரிங் தான் படிச்சாங்க. பெரிய பசங்க ரெண்டுபேருமே குடும்பத்தோட அமெரிக்காவுல இருக்காங்க. சின்னவனும் சென்னை டிசிஎஸ் கம்பெனியில மாசம் நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்குறான். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணமாச்சு. அவன் மனைவி வேலை பார்க்குறதும் அதே கம்பெனிதான். புதுசா கல்யாணம் ஆனவங்க. இதுல நான் வேற எக்ஸ்ட்ரா லக்கேஜா கூட போகணுமா? ஒரு குழந்தை பிறக்குறதுக்குள்ள இப்படி டூர் போய் ஜாலியா இருந்தாதான். அப்புறம் குழந்தை, பணிச்சுமைன்னு ஆயிட்டா எங்கேயும் போக முடியாது. அதே வீடு, அதே கம்பெனி, அதே முகங்கள், ஏன் டிவியில கூட அதே மெகா சீரியல்னு இருந்தா குடும்பத்துக்குள்ள ஏன் உரசல் வராது?
ஆனா, முதல்ல நீங்க ஆசைப்பட்ட கோயில்கள் சிலதுக்கு போயிட்டு வந்துடலாம்னு என் புள்ளையும் மருமகளும் கூப்பிட்டாங்க. நான்தான், இப்ப நீங்க விருப்பப்பட்ட இடத்துக்கு போங்க. பேரனோ, பேத்தியோ பிறந்த பிறகு நானும் வர்றேன்னு சொல்லிட்டேன்.
சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத...நாம தூக்கி வளர்த்த புள்ள நம்மள கண்டிச்சுட்டான்னு கோபப்படுறோமே...அறுபது வயசைத் தாண்டி நமக்கே இவ்வளவு ஈகோ இருக்குன்னா முப்பது வயசுல இருக்குற புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு இருக்கும்.
நாம பெத்து வளர்த்த புள்ளை நம்ம நடவடிக்கையை குத்தம் சொல்றானேன்னு கோபப்படுறோம். அதுவே நெருங்கிய நண்பன் சொன்னா தப்பா எடுத்துப்போமா? அந்த மாதிரி புள்ளையையும் நண்பனா நினைச்சா ஏன் கோபம் வரப்போகுது?'' என்று பேசிய கிருஷ்ணமூர்த்தியின் பேச்சில் மட்டுமல்ல. முகத்திலும் அமைதி தெரிந்தது.
"நீ சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன். அவன் வயசைத் தாண்டிதானே நாமளும் வந்துருக்கோம். நமக்கு தெரியாத நாகரிகமா?'' என்ற ஜெயராமனின் குரலில் லேசான காரம்.
"இந்த ஈகோதான்யா நிறைய குடும்பத்தை குலைச்சுப் போட்டுடுது. நம்ம காலத்துல பொண்ணுங்களுக்கு வேற வருமானம் கிடையாது. வேற வழியில்லாம புரு­னையும், மாமனார் மாமியாரையும் அவங்க இம்சைகளோட சகிச்சுகிட்டு இருந்தாங்க. இப்ப காலம் மாறிப்போச்சு.
புரு­னோட அஞ்சு நிமி­ஷம் தனியா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதைக் கூட குற்றம் சொல்ற மாமனார், மாமியார் அதிகம். அவங்க மனசு விட்டு பேச சந்தர்ப்பம் கிடைச்சா, மனசுல இருக்குற தேடல் குறைஞ்சுடும். எதையும் எரிச்சலோட பார்க்குற மனோபாவம் மாறிடும்.
இந்த மாதிரி சின்ன சின்ன விஷ­யங்கள்ல கிடைக்கிற சின்னப் புள்ளைத்தனமான ஏமாற்றம்தான் குடும்பத்துல பெரிய பிரச்சனையை உருவாக்குது. புள்ளை தன் பொண்டாட்டியோட சினிமாவுகோ கோயிலுக்கோ கிளம்பி போனதுக்கப்புறம், அக்கம்பக்கத்து வீடுகள்ல, நான் இங்க ஒருத்தி சமையலறையில கிடந்து அல்லாடிகிட்டு இருக்கேன். அவ எதைப்பத்தியும் கவலைப்படாம புரு­னோட ஜோடி போட்டு கிளம்பிட்டான்னு பேசுற மாமியார்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு தெரியுமா?
இந்த வி­ஷயம் இன்னும் பல மோசமான வார்த்தைகளோட மகன் மருமகள் காதுக்கு போகும்போது விரிசல் ஆரம்பமாகுது.
ஜோடியா சந்தோஷ­மா இருக்கணும்னுதானே கல்யாணம் பண்ணி வெச்சோம். இப்ப பெரியவங்களே அதைப்பார்த்து எரிச்சலடைஞ்சா என்ன அர்த்தம்.'' என்ற கிருஷ்ணமூர்த்தி ஜெயராமனைப் பார்த்தார்.
"வெளில போய்ட்டு நல்லா சுத்திப்பார்த்துட்டு வாங்கன்னு அனுப்புனா மட்டும் மாமனார் மாமியார் மேல மருமகளுக்கு பாசம் வந்துடுமா?''என்று ஜெயராமன் எரிச்சலுடன் கேட்டார்.
"பாசம் வருதோ இல்லையோ, மாமனார் மாமியார் நம்மளுக்கு இடைஞ்சலா இருக்காங்கன்னு ஒரு எண்ணம் வராது. பையன் ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்துட்டான்னா, டிபன் நான் பண்ணி வைக்கிறேன். ரெண்டு பேரும் வெளில போயிட்டு வாங்கன்னு சொல்லிப்பாருங்க. அது புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு சந்தோ­ஷத்தை கொடுக்கும் தெரியுமா?
ரெண்டு தடவை அப்படி நடந்தா, மூணாவது தடவை கிளம்பும்போது உங்களுக்கும் சேர்த்து டிபன் செஞ்சு வெச்சுட்டு கிளம்புவா. இல்லன்னா, நீங்க சிரமப்படவேண்டாம். "நாங்க ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வந்துடுறோம் அத்தை.' அப்படின்னு சொல்லுவா. தொண்ணூறு சதவீதம் இப்படித்தான் நடக்கும்.
அதை விட்டுட்டு, எங்க காலத்துல அப்படி செஞ்சோம். இப்படி இருந்தோம் அப்படின்னு குறை சொல்லிகிட்டே இருந்தா நம்மளை எப்படா அடிச்சு முதியோர் இல்லத்துக்கு துரத்தலாம்னுதான் யோசிப்பாங்க.
அந்த காலத்துல நடந்து போனாம். ஏதாவது முக்கிய செய்தின்னா தந்தி அடிப்போம். இல்ல டிரங்கால் புக் பண்ணி பேசுவோம். இப்ப அப்படியா? எவ்வளவு வசதிகளை அனுபவிக்கிறோம். அந்த மாதிரி புள்ளைங்க விஷயத்துலயும் நம்ம அணுகுமுறையை மாத்திக்கணும்.'' என்று கிருஷ்ணமூர்த்தி தெளிவாகவே பேசினார்.
"அதுசரி...உனக்கு எப்படிய்யா இவ்வளவு பக்குவம் வந்துச்சு? நல்ல மருமக கிடைச்சதுனால இப்படி பேசுறியா? எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும். எனக்கு வந்து வாய்ச்ச மருமக ராட்சசியால்ல இருக்கா.'' ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.
"நான் இந்த மாதிரி பக்குவப்பட காரணமே என் சின்னப் புள்ளைதான். மூத்தவனுங்க ரெண்டுபேரும் படிப்பு படிப்புன்னு இருந்தாங்க. வேலை கிடைச்சதும் அம்மா அப்பாவை வெச்சு பார்த்துக்கணும்னு நினைக்கவே இல்லை.
ஆனா வடிவேல், நீங்க காலம் பூராவும் என் கூடவே இருந்துடுங்கன்னு சொல்லிட்டான். மருமகளும் கல்யாணமாகி வந்த புதுசுல, உங்க அப்பா மூணு புள்ளைங்ககிட்டயும் ஆளுக்கு ஒருமாசம்னு இருந்து சாப்பிடுறதுதானே நியாயம்னு கேட்டா. ஆனா இவன், அப்பா அம்மாவை வெச்சு பார்த்துக்க லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது. ஆயிரக்கணக்கான ஏழைங்களுக்கு அன்னதானம் செய்யுறது, கோவில் உண்டியல்ல லட்ச லட்சமா பணம் போடுறதைக் காட்டிலும் பெத்தவங்களை வெச்சு காப்பாத்துறது உயர்ந்த விஷயம். அதை செய்ய நமக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி சொல்லணும்.
அவருக்கு நான் ஒரே புள்ளையா பிறந்ததா நினைச்சு என் கூடவேதான் வெச்சுப்பேன். உன்னால முடியலைன்னா விடு. எங்க அப்பாவை நான் பார்த்துக்குவேன்னு சொன்னான். அதுக்கு  அவன் மனைவி, என் அம்மா அப்பாவை நான் இந்த மாதிரி கூட வெச்சுக்க அனுமதிப்பீங்கிளான்னு கேட்டா.
இதுக்கு என் அனுமதி எதுக்கு. தாராளமா வந்து இருக்கலாம். ஆனா அவங்க சம்மந்தி வீட்டுல போய் தங்குறதான்னு யோசிப்பாங்க. அப்படி நினைச்சா, தனி வீட்டுல இருக்கட்டும். வேணுன்னா தனியா வீடு புடிச்சு கொடுத்து மாசத்துல பாதி நாள் நாம அவங்க கூட போய் தங்குவோம். அப்படின்னு சொன்னான். அவன் மனைவி மறு பேச்சு பேசலை. உங்க குணத்தை இப்பதான் முழுசா புரிஞ்சுகிட்டேன்னு சொல்லி அழுறா.
வடிவேலுக்கு இந்த பக்குவத்தை கொடுத்தது, புத்தகங்கள்தான். பேப்பரை கூட படிக்க கூடாதுன்னு அவனை எத்தனையோ நாள் அடிச்சு துவைச்சிருக்கேன். ஆனா அந்த வாசிப்பு பழக்கம்தான், என்னைய நடுத்தெருவுல நிறுத்தாம அவன் கூட வெச்சு பராமரிக்கிற குணத்தை கொடுத்திருக்கு. ஒருத்தனுக்கு நல்ல புத்தகத்தை விட சிறந்த நண்பன் வேற யாரும் இருக்க முடியாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.
கடைசியா ஒண்ணு சொல்றேன். பெத்தவங்க, நம்ம புள்ளை நம்மளை வெச்சு பராமரிக்கணும்னு நினைச்சா சந்தோ­ம். ஆனா ஒவ்வொரு விஷ­யத்தையும் நம்மளை கேட்டுதான் முடிவெடுத்து நடக்கணும்னு நினைச்சா வருத்தம்தான் மிஞ்சும்.
காலம் மாறிப்போச்சுன்னு பேசிகிட்டு இருந்தா மட்டும் போதாது. நாமளும் பல வி­யங்கள்ல நம்மளை மாத்திக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்னு சும்மா மனப்பாடம் செஞ்சு எழுத வெச்சா ஒரு மனுஷ­ன் மாறிட மாட்டான். அதை உணர வைக்கணும். என் புள்ளையை புத்தகங்கள் உணர வெச்சிருக்கு.'' என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லி முடித்தபோது, புத்தகங்கள் ஒரு மனுஷ­னை இந்த அளவு பக்குவப்படுத்துமா என்று நினைத்த போது, அவர் மகனும் மருமகளும் அவர் நினைவில் வந்து போனார்கள்.
---------------------------

1 comment:

  1. Hello Sarvanan,

    Good story. Now the short stories become even shorter 4 lines , 4 seconds etc.,
    Good to know about you. I am also from TIRUVARUR .Drop me a note to aarurbass@gmail.com

    Thanks.

    ReplyDelete