Share

Friday, October 21, 2016

தீபாவளி - மாறிப்போன கொண்டாட்ட முகம்...

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நாடுபவர்கள் குறைவு என்பதால் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டைலரிடம் கொடுத்து அவர் தீபாவளிக்கு முதல்நாள் டெலிவரி தேதி குறித்துக் கொடுத்த அட்டையுடன் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பது, அப்பா, அம்மா, மாமா என்று பலரிடமும் போராடி சிறு சிறு அளவில் வெடிகள் வாங்கி அதை காய வைத்து காப்பாற்றி வைத்திருப்பது என்று இன்னும் என்னென்னவோ சம்பவங்கள், நினைவுகளை கண் முன் நிறுத்தும்.

இளையபாரதம் மின்னிதழ் (16-31 அக்டோபர் 2016) பி.டி.எஃப் பைல் இலவசமாக தரவிறக்கம் செய்ய....

செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கால கட்டம் தொடங்கிய உடனேயே தீபாவளியின் முகம் மாறிவிட்டது என்று கூறலாம். தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து விட்டு பேருக்கு எதாவது வெடியை கொளுத்தி விட்டு பிறகு கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிய இனிப்பு, கார வகைகளை பேருக்கு டேஸ்ட் பார்த்துவிட்டு தொ(ல்)லைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கத்தொடங்கிவிட்டோம்.

பல ஆண்டுகளாக இருந்த பண்டிகை கொண்டாட்ட முறை மாறிய பிறகு அந்த வடிவமாவது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றால் இணையம், ஸ்மார்ட் போன் ஆகியவை அதற்கு வேலையே வைக்கவில்லை. தினமும் காலை (?!) 4 மணி அல்லது 5 மணிக்கு எழுந்து, ஆறரை அல்லது ஏழு மணிக்குள் ஷேர் ஆட்டோ, பேருந்து, வேலைசெய்யும் நிறுவன பேருந்து, மின்சார ரயில் என்று பிடித்து மேற்பார்வையாளர் அல்லது மேலாளரிடம் திட்டு வாங்காமல் ஆபீசுக்குள் நுழைந்து அரைகுறை சாப்பாட்டுடன் வேலையை பார்த்து, மாலை பணி முடித்து அதே போல் திருவிழா கூட்டத்திற்குள் சிக்கி இரவு 11 மணிக்கு வீடு வந்து சேரும் பாவப்பட்ட வாழ்க்கையை கோடிக்கணக்கான நபர்கள் பெரும் நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அவர்களுக்கு தீபாவளி என்றால் பொழுது விடிந்த பிறகு எழுந்திருப்பது மட்டும்தான் தீபாவளி.

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் பெரு நகரங்கள் என்றில்லை, சின்ன சின்ன கிராமங்களில் கூட அருகிலுள்ள நகரத்திற்கு கடைகளில் விற்பனை, அல்லது உற்பத்தி சார்ந்த வேலைகளுக்கு செல்லும் அனைத்து வயதினருக்கும் இதுதான் நிலை. சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்று ஆபத்தான தொழிலில் இருப்பவர்கள் நிலை இன்னும் சோகம். இது போன்றவர்களும், இருக்க இடம் இன்றி பிளாட்பாரங்களில் வாழ்பவர்களும் தீபாவளி போன்ற பண்டிகையை கொண்டாடுவார்களா? அந்த மன நிலை அவர்களுக்கு இருக்குமா? அவர்கள் அப்படி கொண்டாட ஆசைப்பட்டாலும் பொருளாதாரம் இடம் தருமா என்றெல்லாம் யோசித்தால் மவுனம்தான் பதிலாக இருக்க முடியும்.

பொருளாதார ரீதியில் சிரமப்படுபவர்களை விட்டுவிடுவோம். பண்டிகை கொண்டாடக்கூடிய அளவில் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் நிலை வேறு வகையில் சிதைந்து இருக்கிறது. அதாவது ப்ரீகேஜி, எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு கூட காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ஷெட்யூல் இருக்கிறது. அவர்கள் சாதாரண நாட்களில் வீட்டுக்கு வெளியே விளையாடவே நேரம் கொடுப்பதில்லை. அத்தகைய குழந்தைகளும் தீபாவளி அன்று தொலைக்காட்சி, இணையம், ஸ்மார்ட் போன் என்று மூழ்கி விடுகிறார்கள்.

இன்னும் ஒரே ஒரு வழக்கம் மட்டும் ஓரளவு தமிழ் மக்களிடம் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தீபாவளி அல்லது அதற்கு அடுத்த நாள் சினிமாவுக்கு செல்லும் வழக்கம்தான் அது.

முன்பெல்லாம் ஏழு அல்லது எட்டு படங்கள் கூட தீபாவளியில் ரிலீஸ் ஆகும். மொத்தத்தில் தமிழகம் முழுவதும் 60 முதல் 80 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலே அதிகம். வீடியோ பைரசி அபாயம் இல்லாமல் இருந்த காலத்தில் பெயிலியரான மொக்க படம் கூட குறைந்த பட்சம் தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் ஓடி லாபம் சம்பாதித்து கொடுத்ததுண்டு. ஆனால் தற்போது முதல் காட்சி ஓடும்போதே படம் ஹிட் அல்லது பிளாப் என்று ரசிகர்கள் இணையத்தில் உளறிக்கொட்டி விடுகிறார்கள். அதனால் தீபாவளிக்கு இரண்டு படங்கள் அல்லது மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி எல்லா தியேட்டர்களிலும் தங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று மறைமுகமாக கட்டாயப்படுத்திவிடுகின்றன.

இது ஒருபுறமிருக்க, இன்னமும் சினிமாவில் கதை நாயகன் செய்யும் சாகசங்களில் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்றாலும், படங்களில் பார்க்கும் சில விசயங்கள் தப்பு. அதை நாம் செய்தால் சக மனிதன் பாதிக்கப்படுவான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் இளைய தலைமுறையினர் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வேலைக்கு சென்று பக்குவப்பட்ட பிறகு தப்பு செய்வதில்லை என்றாலும் இடைப்பட்ட காலத்தில் தடம் மாறும் இளைய தலைமுறையால் சமூகத்தில் பல மனிதர்கள் வெவ்வேறு வகைகளில் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

உதாரணமாக நாம் ஆசைப்பட்ட பெண் கிடைக்க வில்லை என்றால் காலம் கூடி வரும்போது கண்டிப்பாக திருமணம் நடக்கும், நம் மீதும் நம் குடும்பத்தின் மீதும் அன்பு செலுத்த ஒருத்தி கிடைப்பாள். அவளை நல்லபடியாக வைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு இருப்பதில்லை. கொஞ்சம்பேர்தானே அப்படி இருக்கிறார்கள். அதனால் என்ன என்று விட்டுவிட முடியாது. இந்த சொற்ப சதவீதத்தினர்தான் தன்னை விரும்பாத பெண்ணை கொலை செய்வது, திராவகம் வீசுவது போன்று கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைப்பற்றி எழுதும் எனக்கே மனம் கலங்குகிறது என்றால் நேரடியாக பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நிலையையும் மன நிலையையும் பற்றி எழுத வார்த்தைகளே வரவில்லை.

1996ஆம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில் ஒருதலையாக காதலித்த பெண், வேறு ஒருவரை விரும்புவது தெரிந்ததும் பகையாகி கிடக்கும் இரு குடும்பத்தை சேர்த்து வைத்து அந்த காதலர்களையும் இந்த ஒருதலைக்காதலனே சேர்த்து வைப்பதாக கதை இருக்கும். ஆனால் அந்த படத்தில் நடித்த விஜய், 2003ல் திருமலை படத்தில் விருப்பம் இல்லாத ஜோதிகாவை விரட்டி விரட்டி காதலிப்பதாக கதை போகும். படத்தில் ஜோதிகா மீது விஜய் வன்முறையில் இறங்குவதாக காட்சி இல்லை என்றாலும், சில அரைவேக்காட்டு இளைஞர்கள் மனதில், பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பந்தாவாக, தைரியமாக ஒருத்தியை விரட்டினால் நாளடைவில் தனக்கு மயங்கிவிடுவாள் என்று முட்டாள்தனமான சிந்தனை விதை விழுந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

1997ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற சூர்ய வம்சம் படத்திலும் படிப்பை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, நீ என் அப்பாவுக்கு எப்பவுமே பிடிச்ச பெண்ணாயிரு. நான் பிடிக்காத பிள்ளையாவே இருந்துடுறேன் என்று பெருந்தன்மையுடன் ஒதுங்கிவிடும் வகையில் சரத்குமார் கேரக்டர் இருக்கும். இது போல் எத்தனையோ நல்ல சினிமாக்களை மேற்கோள் காட்ட முடியும்.

நான் கூறுவது, இந்த மாதிரி தெய்வீகத்தன்மையுடன் இளைஞர்கள் இருக்க வேண்டாம். தன்னை பிடிக்கவில்லை என்று கூறும் பெண்ணை விட்டு ஒதுங்கி இவன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழச்சென்றால் போதுமே.

இந்த தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களில் நிச்சயம் ஆன பெண்ணை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்றது தப்பில்லைன்னு கதையமைப்போட எத்தனை படம் இருக்கோ?
************************************
சோழா தியேட்டருக்கு 32வது பிறந்த நாள்

சோழா தியேட்டர் 25-10-1985 ஆம் தேதி திறப்புவிழா செய்யப்பட்டது என்று தியேட்டர் கல்வெட்டில் பார்த்த நினைவு. தற்போது வீடுகளில் உள்ள தொலைக்காட்சி திரைகள் பெரிதாகிக் கொண்டே செல்கின்றன. ஆனால் தியேட்டர் திரைகள் சிறிதாகிக்கொண்டே வருகின்றன. ஆயிரம் பேர், இரண்டாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவில் திரையரங்குகள் கட்டப்பட்ட காலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே போய்விட்டது என்று சொல்லலாம். திருவாரூரில் நகரத்திற்குள் 5 தியேட்டர்கள் இருந்தன.

அவற்றில் பேபி டாக்கீஸ், செங்கம் டாக்கீஸ் ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. இவற்றில் பேபி டாக்கீஸ் மிகச் சிறிய திரையரங்கம். அது நாடக மன்றமாக இருந்து தியேட்டராக உருமாறியதாக கூறுவார்கள். திரைப்பட தயாரிப்பாளர் ஜீ.வெங்கடேஸ்வரனுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பிரச்சனையான காலகட்டத்தில் எந்த ஊராக இருந்தாலும் எவ்வளவு பாடாவதி தியேட்டராக இருந்தாலும் லீசுக்கு எடுத்து சிலகாலம் நடத்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட சில பெரிய படங்கள் அந்த தியேட்டரில் ஓடியது என் நினைவில் இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது மேற்கண்ட தகவல் உண்மையாக இருந்திருக்கலாம்.

செங்கம் டாக்கீசைப் பொறுத்தவரை, சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் நல்ல ஒளி, ஒலி அமைப்புடன் 1965 - 70 காலகட்டத்திற்குள் கட்டப்பட்ட தியேட்டர் என்று நினைக்கிறேன். திருவாரூரில் இது மிகப்பெரிய திரையரங்கம். பின் பாதி அளவில் தனி இருக்கை. அடுத்து கால்வாசி அளவுக்கு பெஞ்சுகள். முன்னால் சுமார் இருபது முதல் முப்பது அடி நீளம் வரை காலி தரை. மொத்தமாக ஆயிரம் பேருக்கு மேல் படம் பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்த தியேட்டர். 1990களிலேயே செங்கம் தியேட்டர் மளையாளப்படங்கள், ஆங்கிலப்படங்கள் என்று திசை தடுமாறி தத்தளித்து 1999ஆம் ஆண்டுடன் படம் திரையிடலை நிறுத்திக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளில் இடிக்கப்பட்டுவிட்டது. கடைசியாக 1999 ஏப்ரல் மாதத்தில் ஆனந்தப்பூங்காற்றே என்ற படம் 48 நாட்கள் ஓடியது. ஆனால் நஷ்டம்தான்.

பொன்னி என்ற பெயரில் கட்டப்பட்டு வந்த தியேட்டர், வேறு ஒருவர் வாங்கியதால் தைலம்மை தியேட்டர் என்ற பெயருடன் 1979ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில் சுமார் 730 இருக்கைகள் இருக்கும். எக்ஸ்ட்ரா இருக்கைகள் போடுவது தனி. (ரஜினி படம், தீபாவளி அன்று இதற்கு வாய்ப்பு இருக்கும்.)

நடேஷ் தியேட்டர் 05-03-1990ல் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடியதாக திறக்கப்பட்டு விஜயகாந்த் ராதா நடித்த மீனாட்சி திருவிளையாடல் படம் திரையிடப்பட்டது. திருவாரூரில் இப்போது இருக்கும் 3 தியேட்டர்களில் 559 இருக்கைகளுடன் கூடிய மிகச் சிறிய தியேட்டர்.

சோழா தியேட்டர் 25-10-1985ல் திறக்கப்பட்டது. இதில் 770 இருக்கைகள் இருந்த நினைவு. அந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ரிலீசான முதல் மரியாதை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் முதல் படமாக திரையிடப்பட்டது. விக்ரம், பூவிழிவாசலிலே போன்ற படங்கள் சோழாவில்தான் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன். திருவாரூர் போன்ற சிறிய நகரங்களில் தியேட்டர்கள் தாக்குப்பிடித்து நிற்பது மாபெரும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். 

பெரிய நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இருக்கும் இடங்களில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல வர்த்தகம் நடக்கும்போது அவர்களால் தியேட்டர் நடத்துவது கடினமான ஒன்றாக இருக்காது. ஆனால் திருவாரூரில் நடேஷ், தைலம்மை ஆகிய இரண்டு தியேட்டர்களின் முன்பும் காம்ப்ளக்ஸ் உண்டு. ஆனால் சோழாவைப் பொறுத்தவரை மூன்று நான்கு கடைகளில் 1 கடையோ இரண்டு கடையோதான் இயங்குவதாக நினைக்கிறேன். இப்படிப்பட்ட சூழலில் தொடர்ந்து படம் திரையிடல் வருமானத்தை மட்டும் வைத்து இயங்கி வருகிறது இந்த சோழா தியேட்டர். (உரிமையாளருக்கு வேறு பல தொழில்கள் இருக்கலாம். கோடிக்கணக்கில் வருமானம் இருக்கலாம். நான் குறிப்பிட்டிருப்பது தியேட்டர் இருக்கும் இடத்தை வைத்து கூறியுள்ள மதிப்பீடு)

25-10-2016 அன்று 32ஆம் ஆண்டு தொடக்கவிழா காணும் சோழா தியேட்டருக்கு வாழ்த்துக்கள்!
****************************************************
சினிமா தியேட்டர்கள் மூடப்படுவதற்கு யார் காரணம்?
2010 ம் ஆண்டு எழுதப்பட்டது.

1996ம் ஆண்டு நான் சினிமா தியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)

அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம். பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல ஒரு தியேட்டர்ல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.

இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(1996ம் ஆண்டில்)

இவை தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க. ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு. நீதிக்கு தலைவணங்குற மாதிரி மனுநீதி சோழனை நினைவு படுத்தக்கூடிய சோழா என்ற பெயர் கொண்ட திரையரங்கம்தான் அது.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ, மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க. இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க. அதுவும் ஒருநாள் கூத்துதான்.

பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய், உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த .............. தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க சூப்பர் ஐடியா
பல தியேட்டர்களை மூட வைத்த இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாயிலிருந்து கிடைப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.

இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

*********************************************************
திருவாரூர் டூ குற்றாலம்
2010ம் ஆண்டில் எழுதப்பட்ட பயணக்கட்டுரை
சிங்கம் தனியா போய்தான் அதிரவைக்கும்னு சொல்றாங்க. ஆனா நிஜ வாழ்க்கையில சிங்கிளா இருந்தா பல இம்சைதாங்க வருது.எல்லாத்தையும் சொல்ல நேரம் இல்லை.அதனால சில வில்லங்கத்தை மட்டும் தட்டச்சிருக்கேன்.

ஜூன் முதல்வாரம் குற்றாலத்துல நெருங்கிய உறவினர் கிரஹப்பிரவேச விழா வெச்சிருந்தார். பாட்டி காலமானதும் ஏப்ரல் இறுதியில இருந்து மே மாசம் முழுவதும் திருவாரூர்-பரமக்குடி பயணமாவே இருந்ததால அம்மாவை விட்டுட்டு நான் மட்டும்தான் குற்றாலம் போனேன்.

விசேஷகாலமா இருந்ததால இரவு நேரத்துல தஞ்சாவூர்ல இருந்து மதுரை போறவரை இடம் கிடைக்கிறது கஷ்டம். அங்கிருந்து செங்கோட்டை போற பஸ்சுலயும் சூழ்நிலை எப்படி இருக்குன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பலை.

அரசு விரைவுப் பேருந்தில் முன்பதிவு பண்ண போனேன். ஆறாம் நம்பர் இருக்கையே கிடைச்சது. பதினோரு மணி நேர டிராவல்ல குறைஞ்சது ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கலாம்னு நம்பிதாங்க பஸ்சுல ஏறுனேன்.

நைட் டின்னருக்காக(?!) தஞ்சாவூர்லயே கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வெயிட்டிங்.

தஞ்சை நகரைக் கடந்ததும் ஓரமா வண்டி நின்னுச்சு. என்னன்னு பார்த்தா கண்டக்டர், டிரைவர் சீட்டுல உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார். சிக்கன நடவடிக்கையால ஹெவி டிரைவிங் தெரிஞ்ச ஆளைத்தான் கண்டக்டரா போட்டுருக்காங்கன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு அந்த இளைஞரை கண்டக்டராவே பார்த்துச்சு.

அப்புறம் எங்க தூங்குறது?

ஆனா கண்டக்டர் ரொம்ப சரியா கிளட்சை யூஸ் பண்ணி கியர் மாத்தி பஸ்சை இயக்குனார்.‘சரி...இவர், வேலைக்கு சேர்ந்து ரொம்ப நாள் ஆகலை போலிருக்கு. எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள்ல பலர், கியர் பாக்ஸ் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு கிளட்சை ஒழுங்கா பயன்படுத்தாமயே கியர் மாத்துவாங்க.’அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

மதுரை வரைக்கும் எனக்கு தூக்கமே வரலை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுலேருந்து கிளம்பினதுமே தூங்கலாம்னு நினைச்சேன். ஆனா பஸ் ரிங் ரோடு போகாம யானைக்கல், வடக்குமாரட்வீதி வழியா பழ மார்க்கெட் போகுதேன்னு பார்த்தேன். கண்டக்டர் கீழே இறங்கிப் போய் பழங்கள் வாங்கிட்டு வந்தார்.(அவங்களுக்குதான்.)

அப்படியே பெரியார் பேருந்து நிலைய பகுதி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை வழியா போய் திருமங்கலத்தை நெருங்குனுச்சு. சரி...இனிமே வேடிக்கை பார்க்க எதுவும் இல்லைன்னு நினைச்சு கண்களை மூடி தூங்க முயற்சி செஞ்சேன்.

சில நிமிஷங்கள்தான்.ஒரு அவலக்குரல். வேற ஒண்ணுமில்லைங்க. அஞ்சு வரிசைக்குப் பின்னால உட்கார்ந்துருந்த ஒருத்தர் மூணு வரிசை ஆளுங்க மேல வாந்தி எடுத்துட்டார். சாதாரணமாவே எனக்கு பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வர முயற்சிக்கும். நான் வாயை வயித்தைக் காயப்போட்டு சமாளிச்சுடுவேன்.

ஆனா அந்த ஆள் ஃபுல் மப்புல சைடு டிஷ்ஷா என்ன எழவைத்தின்னாரோ? அது எதுக்குமே அவரோட வயித்தைப் புடிக்கலை.(பஸ் மேல என்ன பாசமோ) எல்லாம் வெளியில வந்துடுச்சு.

ஆறு பேர் சட்டையை கழட்டிட்டாங்க. வாந்தி எடுத்தவரை அடிக்க இல்லைங்க...இந்த நாத்தம் தாங்காமதான். அப்புறம் சாலையோர டீக்கடையில பஸ்சை நிறுத்தி காசு கொடுத்து நாலு குடம் தண்ணி வாங்கி பஸ்சை அலசி விட்டார் கண்டக்டர். நடக்குறது,பறக்குறது, நீந்துறதுன்னு என்னென்ன அவரு வயித்துக்குள்ள இருந்துச்சோ? அவ்வளவு சீக்கிரம் நாத்தம் போயிடுமா?

கண்டக்டரோட கைக்காசுல சாய்பஜன் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாம் வாங்கி கொளுத்தி வெச்சார். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு முக்கால் மணி நேரம் அவுட்.

பஸ் கிளம்புனதும் அப்பாடா, இனி இல்லை தொல்லைன்னு நினைச்சா மறுபடி ஒரு நாத்தம்.

எனக்கு பக்கத்துல உட்கார்ந்துருந்தவர், செண்ட் அடிச்சார். அடப்பாவி...இதுக்கு அந்த வாந்தி நாத்தமே பரவாயில்லையேன்னு மனசுக்குள்ளயே புலம்புனேன். வேற என்ன பண்றது?

நானூறு கிலோமீட்டர் தொலைவா இருந்தாலும் இரவு நேரப் பயணத்துல சில சவுகர்யங்கள் இருக்கு. வெயில் தெரியாது. சராசரியா பகல் நேரத்தை விட இரவு நேரத்துல பத்து கிலோ மீட்டர் வேகம் அதிகமாவே இருக்கும்.தென்காசி பகுதியில ரயில்வே மேம்பாலம் கட்டுறதால செங்கோட்டை போற பஸ் எல்லாமே இலஞ்சி சந்திப்போட வேற வழியா போயிடுச்சு.

அதனால குற்றாலம் போக வேண்டிய நான் இலஞ்சியிலேயே இறங்கினேன். நிறைய தமிழ் சினிமாவுல வர்ற மாதிரியே நான் இறங்கின இடத்துலயும் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்துச்சு.

அதிகாலை நாலு மணியா இருந்தாலும் பங்காளி ஒருத்தர் டூவீலரை எடுத்துகிட்டு வந்துட்டார்.அவரோட போய் கிரஹப்பிரவேச வீட்டுக்குப்போய் குளிச்சி மேக்கப் போட்டு, விழாவுல கலந்துகிட்டு, வயித்தை நிரப்பின பிறகு பார்த்தா மணி ஆறே முக்கால்தான் ஆனது.

தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க...
அண்ணே...அப்படியே எல்லா அருவிக்கும் போய் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். இன்னொரு பங்காளியும் வண்டியில என்னைய அழைச்சுட்டு போனாரு.

பிரதான அருவி தெரியுற தூரத்துலயே நிறுத்திட்டு,தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க..."அப்படின்னு சொன்னார்.

நான் ஷாக்காகி அவரைப் பார்த்தேன்.

ஏண்டா டேய்...சீசன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால வந்தா இப்படி நின்னு கும்பிட்டுட்டுதான் போகணும். அடுத்து ஐந்தருவிக்குப்போவோம்...இப்ப வீட்டுல குருக்கள், கோமியம் தெளிச்சாரே...அந்த மாதிரி முடியுதான்னு பார்க்கலாம்னு சொன்னார்.

நீங்க தண்ணியே தெளிக்க வேணாம்னு வீட்டுக்கு வண்டியை திருப்ப சொல்லிட்டேன்.

குற்றாலம் வரைக்கும் போயிட்டு அருவியிலயே குளிக்க முடியலையேன்னு நொந்து போய் வந்தா பாபநாசம் அணைக்குள்ள இருக்குற பாணதீர்த்த அருவியில எப்படி தண்ணீர் கொட்டுறதை இணையதள செய்தியைப் பார்த்து என் வயித்து ஹீட் அதிகமானதுதான் மிச்சம்.

சிங்கம் சிங்கிளா போனா எவ்வளவு அக்கப்போர்?

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்...இப்படி எல்லாம் டயலாக்கை ஹீரோ பேசும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா தனியா பஸ்சுல பயணம் பண்ணும் போது எவ்வளவு இம்சையா இருக்கு தெரியுமா? நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்போது கஷ்டம் தெரியாது.

இப்ப நான் போன மாதிரி நானூறு கிலோமீட்டர் வேணாம், நம்ம நாட்டுல பல சாலைகளில் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் போறதுக்குள்ளயே நாக்கு வெளியில வந்துடுது.(திருவாரூர் - தஞ்சாவூர் தூரம் 65 கிலோ மீட்டர்தான். ஆனா இந்த தூரம் போறதுக்குள்ளயே ஸ் ஸ் சப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு புலம்ப வேண்டியதுதான்.)

காத்தோட்டமா ஜன்னல் ஓரமா அப்படான்னு போய் உட்கார்ந்துருப்போம். ரெண்டு லேடீஸ் வந்து,சார் அங்க மாறி உட்காருங்களேன்."அப்படின்னு ஆரம்பிப்பாங்க.ரெண்டு பேரா போனா இந்த இம்சை இல்லை.

இப்படித்தான் ஒரு தடவை நான் தஞ்சாவூர்லேருந்து திருவாரூர் வரும்போது மாறி உட்கார சொன்ன ஒரு பொண்ணுகிட்ட கோபப்பட்டேன்.

இப்ப மாறி உட்கார சொன்னீங்கன்னா பின் பக்க கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்.மாறி உட்கார சொல்லியே டிரைவருக்கு எதிர்ல இருந்த என்னைய பின்பக்க வாசல் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இப்படியே அடுத்த பஸ்சுக்கு அனுப்பிடலாம்னு பார்க்குறீங்களா?"ன்னு விட்ட சவுண்டுல அந்தப் பொண்ணோட சேர்ந்து கண்டக்டரும் சிரிக்கிறாரு.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு, நண்பர்கள் யாரையாவது கூட அழைச்சுட்டுப்போனாத்தான் கிடைக்கும். இன்னும் பெட்டர் ஐடியான்னா அது மனைவியோட பயணம் பண்றதுதான்னு நான் சொல்லுவேன். (சீக்கிரம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லணும்.)

இந்த கட்டுரை 2010ஆம் ஆண்டில் எழுதியது. இப்போது எனக்கு திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.

******
சிங்கிளா இருந்து சாதிக்கிறது எல்லாம் சினிமா வசனத்துக்குதான் சரியா வரும். குறைந்த பட்சம் இன்னொருத்தர் உதவி இல்லாம பெரும்பாலான காரியங்கள் பெரிய வெற்றி அடையுறது இல்லை.

வில்லன் நடிகர் சொதப்பியிருந்தா கில்லியின் அபார வெற்றியும், சிங்கம் படம் இப்படி பேசப்படுறதும் அவ்வளவா சாத்தியம் இல்லை.

******************************************************************
23-10-2010
......ஒவ்வொருத்தருக்கும் கம்ப்யூட்டர் இலவசம்.

இதுதான் அடுத்த அறிவிப்பா இருக்கும். தமிழக சட்டமேலவைக்கு தேர்தல் நடத்தியே தீருவதுன்னு பட்டதாரி, ஆசிரியர் தொகுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறதுக்கான வேலைகள் தொடங்கிடுச்சு.
 
கொஞ்ச நாள் வரைக்கும், ‘நம்ம ஆளுங்கதான் ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக்கூட குடிப்பாங்க’ன்னு ஒரு சினிமாவுல கவுண்டமணி சொல்ற டயலாக்கை நானும் பேசிக்கிட்டுதான் இருந்தேன்.

இந்த மாதிரி ஒரு தொகுதிக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் சரி பேர் சேர்த்து அடையாள அட்டையை வாங்கித்தான் வெச்சுப்போமே ஒரு ஆசை. ஏற்கனவே எழுத்துப்பிழையோட வாக்காளர் அடையாள அட்டை, அட்ரசுல எழுத்துப்பிழையோட பான் கார்டு, எப்படியோ ஓட்டிக்காட்டி வாங்கின லைசென்ஸ் அப்படின்னு பல கார்டுகளோட இதுவும் இருந்துட்டு போகட்டுமேன்னு முடிவு பண்ணினேன்.

வேலை பார்க்குற இடத்துல ஒரு நண்பர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அடிக்கடி போவார். அவர்கிட்ட,‘ எனக்கு இது பற்றி முழு விவரங்கள் தெரியலை. உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க இருந்தா விவரம் கேட்டு அப்ளிகேஷன் வாங்கிட்டு வாங்களேன். அப்படின்னு சொன்னேன்.

அடப்போய்யா...ஏற்கனவே சாதாரண வாக்காளர் அடையாள அட்டையை வெச்சு ரொம்ப அதிகமா கிழிச்சுட்டியாக்கும். போய் வேற வேலையைப் பாருப்பா."அப்படின்னு அலுத்துகிட்டார். (நண்பேன்டா) அவரு அந்த அட்டையை வெச்சு எங்கெங்க மூக்குடைபட்டாரோ...பாவம்.

இதுக்கு மேல அடுத்தவங்களை நம்பி சரிவராதுன்னு நெட்டுல விவரங்களை டவுன்லோடு செஞ்சேன்.

முதல் பட்டதாரின்னு ஒரு சான்றிதழ் வாங்குறதுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு 2000வது வருஷம் போனது. அதுக்கப்புறம் என் வேலையா அங்கே போனதே இல்லை. வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் கொடுத்தது, போட்டோ எடுத்தது எல்லாமே எங்க வீட்டுக்கு அடுத்த தெருவுல இருந்த வாக்குச்சாவடியிலேயே முடிஞ்சுடுச்சு.

இந்த பத்து ஆண்டுகள்ல அடுத்தவங்க வேலைக்காக ஒண்ணு ரெண்டு தடவை போயிருக்கேன். பொதுவாவே இந்த மாதிரி அரசு அலுவலகத்துக்குப் போனா பெரும்பாலான ஊழியர்கள் ‘நான் கடவுள்’ தோரணையிலேயே நடந்துக்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

இந்த தடவை நமக்கு அப்படி எதாவது இன்சல்ட் நடந்தா அதை அப்படியே சுடச்சுட நியூசாக்கிடலாம்னு ஒரு ஐடியாவோடத்தான் போனேன். (இப்போ ஒரு தமிழ் நாளிதழோட கிளை அலுவலகத்துல வேலை பார்க்குற துணிச்சல்தான். இல்லன்னாலும் இருக்கவே இருக்கு இளைய பாரதம்.)

நிச்சயம் ஒரே நாள்ல வேலை நடக்காது. எத்தனை நாள் அலையணுமோன்னு நினைச்சுகிட்டுதான் 22.10.2010 அன்று ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு போனேன். என்ன ஒரேடியா மட்டம் தட்டுறன்னு கேட்காதீங்க. என் ராசி அப்படி. அவசரமா தீப்பெட்டி வாங்கணும்னு பஸ்ஸ்டாண்ட்ல இருக்குற கடைகளுக்கு போனா கூட அங்க ஸ்டாக் இல்லாம பத்து கடைகள்ல அலைஞ்சுதான் வாங்கணும்.

சுருக்கமா சொன்னா எல்லாரும் ஹாயா லிப்ட்டுல ஏறி மாடிக்குப் போவாங்க. எனக்கு அப்படி போக கொடுப்பினை இருக்காது. மாடிப்படியில ஏறித்தான் போகணும். உடம்புக்கு நல்லதுதானேன்னு கேட்பீங்க. ரெண்டு மூணு மாடின்னா பரவாயில்லை. பத்து மாடிக்கு தினம் பத்து தடவை ஏறி இறங்குறதுன்னா...என்ன ஷாக் ஆகிட்டீங்கிளா. இதுதாங்க என் அதிர்ஷ்டம். எனக்கு பழகிடுச்சு.

22.10.2010 அன்று தமிழ்நாடு கிழக்கு மத்தியம் பட்டதாரி தொகுதி வாக்காளர் பட்டியல்ல என் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுக்க போனேனா...அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

நான் எல்லா ஆவணங்கள், ஜெராக்ஸ் அப்படின்னு ரொம்ப தயாராத்தான் போயிருந்தேன். ஒரு ஊழியர்கிட்ட விபரம் கேட்டதும் கோபப்படாம டக்குன்னு விபரம் சொன்னார்.

அது ஏன்னு எனக்கு தெரியலை.

பொதுவான வாக்காளர் பட்டியல்ல பேர் சேர்க்கணும்னு சிறப்பு முகாம் நாட்கள்ல வாக்குச்சாவடிக்கு போனா தப்பிச்சோம். இந்த மாதிரி அலுவலகத்துக்கு போனா சரியான பதில் கிடைக்காது. ஏன்னா அவங்களுக்கே எப்ப விண்ணப்பம் வாங்கணும்னு தெரியாம இருக்கலாம். அது சரி, கதவைப் பூட்டிட்டு இழுத்துப்பார்க்க கூட மேலதிகாரிகிட்ட அனுமதி வாங்கணும்குற மாதிரி பல விதிகள் காலத்துக்கு பொருந்தாம இன்னும் இருக்குதே.

என்கிட்ட அவர் மரியாதையா பேசினதுக்கு காரணம், நான் பட்டதாரின்னுங்குறதுனாலயா,
இல்ல...ஆசிரியர் தொகுதிக்கு ஒருத்தர் கூட விண்ணப்பம் கொடுக்க வரலை. வேற வேலை வெட்டி இல்லாததால பட்டதாரி தொகுதிக்கு பேர் கொடுக்க இந்த மாதிரி வர்ற யூத்துகளையும் பயமுறுத்தி விரட்டி விட்டுட்டா ஆளில்லா கடையில எப்படி டீ ஆத்துறதுன்னு பயமா.

எனக்கு எதுவும் தெரியலையே.

அஞ்சு நிமிஷத்துல என் விண்ணப்பத்தைக் கொடுத்து துணை தாசில்தார்கிட்ட ஒப்புகை ரசீது வாங்கிட்டு வந்துட்டேன். இப்ப தெரியுதா நான் ஏன் ஷாக் ஆனேன்னு.

இந்த மாதிரி அப்ளிகேஷன் போட்டதை வெளியில சொன்னதும் உன் வேலையை ஒழுங்கா பார்த்தா என்ன...அவனுங்க சம்பாதிக்க நீ உன் நேரத்தை வேஸ்ட் பண்ணி இப்படி அலையுறியான்னு கேட்டாங்க.

பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகள்ல இருக்குற வாக்காளர் எல்லாருக்கும் கம்ப்யூட்டர் இலவசம். அப்படின்னு அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணும் இல்லை. ஏன்னா தமிழ்நாட்டோட நிலைமை அப்படின்னு நான் சொன்னதும் அவங்களும் யோசிக்கத் தொடங்கிட்டாங்க.

அப்புறம் ஏதாவது ஒருத்தர் 3ஜி அல்லது 4ஜி வயர்லெஸ் இண்டர்நெட் சேவை நிறுவனம் ஆரம்பிப்பார். இலவச கம்ப்யூட்டர் வாங்கின எல்லாரும் சும்மாவா வெச்சிருப்பாங்க...இணைய இணைப்பு வாங்கி வருஷத்துக்கு பத்து பதினஞ்சாயிரமாவது பில் கட்ட மாட்டாங்களா?

இந்தியன் படத்துல ஒரு வசனம். மற்ற நாடுகள்லயும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க கடமையை மீறத்தான் லஞ்சம். இங்கதான் கடமையை செய்யவே லஞ்சம்.

ஒட்டுப்போட பணம் ஏன் கொடுக்கலைன்னு கேட்குற அளவுக்கு பப்ளிக்கே அப்படி இருக்கும்போது சில அரசியல்வியாதிங்களை எப்படி முதல் குற்றவாளியாக்குறது.

*****************
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்போவதாக தேர்தல் வாக்குறுதி 2011ல்தான் வந்தது. ஆனால் நான் 23-10-2010ம் தேதியே இலவச கம்ப்யூட்டர், 3ஜி, 4ஜி இன்டர்நெட் என்று விசயங்களை புகுத்தி கட்டுரை எழுதியிருக்கேன். இது என்னோட தீர்க்க தரிசன பார்வையா அல்லது என்ன மாதிரி ஆள் எல்லாம் எளிதா கெஸ் பண்ணக்கூடிய அளவுல நாட்டு நடப்பு கெட்டுப்போயிருக்கா?

***************
ஒரு கல்வி நிலையத்தின் தரத்திற்கும் அங்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் நேரடித் தொடர்பே கிடையாது.
நீங்கள் நல்லது சொன்னால் நடக்கவும் செய்யலாம், நடக்காமலும் போகலாம். கெட்டது சொன்னால் கண்டிப்பாக நடந்தே தீரும்.

மக்களை ஒரு விசயத்தை நம்ப வைக்க வேண்டுமானால் அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும்.

No comments:

Post a Comment