Share

Sunday, November 13, 2016

1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்

1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்:-

2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது புழக்கத்தில் உள்ள 1000 ரூபாய், 500 ரூபாய் செல்லாது என்று அறிவித்திருக்கிறார். இதில் கருப்பு பண முதலைகள் கதிகலங்கினார்களோ இல்லையோ சாமானிய மக்கள் கலங்கிப்போனது நிஜம். இப்படி செய்திருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. இனி அரசு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறுகிறேன்.

ரொக்கப்பணமாக மட்டும் பரிவர்த்தனை நடப்பதுதான் கருப்பு பணம் உருவாக காரணம் என்பது நாடறிந்த ரகசியம். டிஜிட்டல் பரிவர்த்தனையை எழுதப்படிக்க தெரியாதவர் கூட இதை எளிமையாக கையாளும் வகையில் அதே சமயம் பாதுகாப்புடம் இருக்குமாறு மேம்படுத்துவதுதான் முக்கியம்.

அப்படி செய்யாமல் ரூபாய் நோட்டுப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது, சாமானியரின் வியாபாரத்தை பாதித்து அவர்களை பட்டினியில் தள்ளுவதற்குதான் பயன்படும். கொஞ்சம் அநாகரிகமான உதாரணம் கூறுகிறேன்.

திறந்தவெளியில் மலம் கழிப்பது தவறு. சுகாதாரக்கேடு. இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, வீடற்றவர்களுக்காகவும், பயணத்தில் இருப்பவர்களுக்காகவும் வீட்டை விட்டு வெளியில் அதாவது வேலை, கல்வி இன்ன பிறவற்றிற்காக செல்பவர்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வீதிக்கு ஒரு இலவச, சுத்தமான, சுகாதாரமான கழிப்பறை இருக்க வேண்டும். அதை உறுதி செய்த பிறகு திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடை செய்யலாம். அதற்கு முன்பாக பொது கழிப்பிடமும் போதுமான அளவில் இருக்காது, திறந்த வெளியில் யாரும் மலம் கழிக்கவும் கூடாது என்று கடுமையாக சட்டம் பிறப்பித்தால் என்ன விளைவு ஏற்படுமோ, அதே கோணத்தில் யோசித்தால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு தயாராகாமல் ரூபாய் நோட்டுக்கள் கையில் கிடைப்பதை தடை செய்தால் என்ன நடக்கும் என்பது புரியும்.

நம் மக்களிடம் ஏதாவது நெருக்கடி நிலை வரும்போதுதான் ஒன்றை செய்வார்கள். அதே போல் இப்போது ரொக்க பணம் கையில் கிடைப்பதில் சிக்கல் என்றவுடன் டிஜிட்டல் மணியை நோக்கி செல்ல தயாராக இருப்பார்கள். அதற்கு அரசும், நிபுணர்களும் மக்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டியது அவசியம்.

முக்கியமாக வருமான வரியை நீக்கி ரொக்கப் பரிவர்த்தனையில் சில வகை பிரித்து .02 முதல் 1 சதவீதம் விதித்தால் போதும். யாருக்கும் வலிக்காமல் பலமடங்கு அரசுக்கு வரி வருவாயும் கிடைக்கும். மக்களும் சிரமப்படாமல் தேசத்தை கட்டமைக்க உதவுவார்கள்.

இளையபாரதம் மின்னிதழை இங்கேயும் தரவிறக்கலாம்...
****************************************************************
குழந்தைகள் தின சிறப்பிதழ்

நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விஷயம்.
என்னுடைய சிறுவயதில் காமிக்ஸ், நாளிதழ்களின் இணைப்பிதழில் வெளிவரும் படக்கதைகள் ஆகியவற்றை படித்துதான் தமிழே கற்றுக்கொண்டேன். இப்போது இளையபாரதத்தில் குழந்தைகள் தின சிறப்பிதழ் என்ற உடன் சிறுவர்களுக்கான கதைகள் இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் இளையபாரதம் வலைப்பூவில் நான் எழுதிய பல கட்டுரைகள், கதைகளில் குழந்தை வளர்ப்பில் பெற்றோர், சுற்றத்தார் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த வலியுறுத்தல்கள் பரவிக்கிடப்பதை பார்த்தேன். அவற்றில் சிலவற்றை இங்கே பதிப்பித்திருக்கிறேன்.
***********************************************************


பார்றா...” - சிறுகதை

தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்டு இந்தியா முழுவதும் விற்பனையாகும் பிஸ்கட் கம்பெனி பொன்விழா கண்ட பிறகும் திருவாரூரில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அந்த நிறுவனத்தை உருவாக்கிய முதலாளியின் பேரன் பழனியப்பன்தான் தற்போது நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவர்களுக்கு பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம்தான் பிரதான தொழில் என்றாலும் போக்குவரத்து, திரையரங்கம், திருமணஅரங்கம், மருத்துவமனை, உணவுவிடுதி என்று பல துணைத் தொழில்களையும் லாபகரமாக நடத்தி வந்தார்கள். இந்த ஆண்டு அவர்கள் புதியதாக பள்ளிக்கூடத்தை துவங்கியுள்ளார்கள்.மற்றொரு வியாபாரம்(?!) 


பழனியப்பனின் மனைவி சொர்ணாம்பிகாதான் பள்ளி முதல்வர்.

அந்தப்பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி ஆண்டிலேயே இருநூற்று பதினான்கு பேர் சேர்ந்த சந்தோ­த்தில் இருந்தார் பள்ளி முதல்வர் சொர்ணாம்பிகா. ஆனால் பதினைந்தே நாட்களில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று அவர் மட்டுமின்றி அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளும் எதிர்பார்க்கவில்லை. சொர்ணாம்பிகா சட்டென்று டெலிபோன் மூலம் கணவரிடம் விவரத்தை தெரிவித்துவிட்டார்.


அவர் பேசி முடித்ததும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை விஷ்ணுப்ரியா, “சார் என்ன சொன்னாங்க மேடம்?  ” என்றார்.முரளியை அனுப்புறேன்... வி­யத்தை அவரோட பொறுப்புல விட்டுடுங்கன்னு சொல்லிட்டார்.”


மேடம்... முரளி அக்கவுண்ட்ஸ்ல பெரிய ஆள்தான் ஒத்துக்குறோம். இது பசங்க சம்மந்தப்பட்டது. ரொம்பவும் சென்சிட்டிவான வி­யம். இந்த மாதிரி சூழ்நிலையில அதிரடியாத்தான் முடிவெடுக்கணும். அலட்சியமா ஹேண்டில் பண்ணினா இதுவே தொடர்கதையாக வாய்ப்பு இருக்கு. நான் சொல்றதுதான் சரியான வழி. ஸ்ருதியோட பேரண்ட்ஸ் சமாதானமாகுற விதமா நாம ஏதாவது செய்யலைன்னா நம்ம ஸ்கூலுக்குதான் கெட்டபேர். அப்புறம் உங்க இஷ்டம்.” என்றார் சசிகலா என்ற ஆசிரியை


இந்த விஷ­யத்தைக் கையாளும் பொறுப்பு முரளியிடம் போவதை சசிகலா விரும்பாததை இந்தப் பேச்சிலிருந்தே அனைவரும் தெரிந்து கொண்டனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பள்ளி அலுவலகப் பணிகளுக்கு  இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நடந்தபோது ரசீது போட்டுக் கொடுக்கும் பணியை சசிகலாவே ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்.


இப்போது கணக்குகளை முறையாகப் பராமரிக்கும் பணியை பகுதிநேரமாக செய்யும் பொறுப்பு பிஸ்கட்தொழிற்சாலையில் வேலை செய்யும் கணக்காளரான முரளியிடமே பழனியப்பன் ஒப்படைத்ததும்தான் சிக்கலே.

பள்ளிக்கூடத்திற்கு வந்த கணக்காளரைப் பார்த்த சொர்ணாம்பிகாவுக்கு மட்டுமின்றி மற்ற ஆசிரியைகளுக்குமே நம்பிக்கை இல்லை.


காரணம் முரளியின் வயதுதான். திருவாரூர் கல்லூரியில் பி.காம் முடித்ததுமே, தான் கணிணி பயிற்சி பெற்ற நிறுவனத்தின் மூலமாக இந்த பிஸ்கட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தவன்.


அவனை வரவேற்பறையில் அமரவைத்துவிட்டு சொர்ணாம்பிகா செய்த முதல் காரியம், பழனியப்பனுக்கு போன் செய்து, “என்னங்க இது... ஒரு சின்னப் பையனை நம்பி இவ்வளவு பொறுப்பைக் குடுத்துருக்கீங்க...”என்று கேட்டதுதான்.


என்னைய என்ன முட்டாளுன்னு நினைச்சியா... சேல்ஸ்டாக்ஸ், இன்கம்டாக்ஸ்ல எல்லாம் சின்ன மிஸ்டேக்கை கண்டுபிடிக்காததால பல வரு­மா இழுத்துகிட்டு இருந்த கணக்கு வழக்கை எல்லாம் வேலைக்கு சேர்ந்த ரெண்டு மாசத்துக்குள்ள சரிசெஞ்சுட்டார்முரளி இப்ப பிஸ்கட் பாக்டரிக்கு மட்டும் அக்கவுண்டன்ட் கிடையாது. நம்மளோட எல்லா தொழில்லயும் சிக்கலான கணக்குகளை சரிபண்ணி பராமரிக்கிறதுதான் அவரோட முக்கிய வேலை. ஆளைப் பார்த்து எடை போடாம ஒழுங்கா அவருக்கு உதவி பண்ணுங்க.”என்று கோபமாகப் பேசிய பழனியப்பன் சட்டென்று டெலிபோன் தொடர்பைத் துண்டித்தார்.


ரசீதுப் புத்தகங்கள், ஓர் எண்ணுக்கு மூன்று பிரதிகள் வீதம் தயாரிக்கப்பட்டிருந்தன. மாணவருக்கு முதல் பிரதியும், அலுவலகத்தின் கோப்புகளில் வைப்பதற்கு இரண்டாவது பிரதியும், பணம் வசூலிப்பவர்களின் வசதிக்காக அடிக்கட்டாகப் பயன்படும் வகையில் மூன்றாவது பிரதியும் இருந்தன. ஆனால் சசிகலாவுக்கு இந்த விவரம் புரியமலோ தெரியாமலோ ஒன்றாம் எண் ரசீதின் மூன்று பிரதிகளிலும் மூன்று மாணவர்களுக்கு பில் போட்டுக் கொடுத்துவிட்டார். மாணவரின் பெயர், வகுப்பு, தொகை ஆகிய விவரங்களை தனியே ஒரு வெள்ளைத்தாளில் மிக அழகாக எழுதி வைத்திருந்தார்.


என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க...”என்று முரளி சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் சசிகலாவுக்கு தவறை ஒப்புக்கொள்ள மனமில்லை.


நாங்க எல்லாம் டீச்சர்ஸ். பாடம் நடத்துறதுதான் எங்க வேலை. ஆள் இல்லையேன்னு ஏதோ யஹல்ப் பண்ணினேன். பழக்கமில்லாத வேலையில இப்படி சின்ன சின்ன தப்பு வரத்தான் செய்யும்... ”என்று சமாளித்தார்.


வரிசையா மூணு ரசீதும் வேறவேற கலர்ல ஆனா ஒரே சீரியல் நம்பரா இருக்கே...கார்பன் வெச்சுதான எழுதணும்னு புரிஞ்சுக்க இதுல பி.ஹெச்.டி பண்ணிட்டு வரணுமாக்கும்.என்னமோ போங்க... பிரின்சிபால் மேடமும் அவங்க ரசீது போட்ட அழகைப் பார்க்கவே இல்லை போலிருக்கு...” என்று சொர்ணாம்பிகாவையும் சேர்த்து வாரினான்.


அவனுடைய பேச்சு இப்படி இருந்தாலும் அக்கவுண்ட் வி­யத்தில் பழனியப்பன் சொன்னபடியே மிகவும் திறமைசாலிதான். மூன்று மணிநேரத்திலேயே கணிணியில் எல்லா விவரங்களையும் பதிவேற்றம் செய்துவிட்டான். மறுநாள் வந்து  ஒவ்வொரு பிள்ளையின் பெயர், முகவரி, பெற்ற கட்டணம், பெற வேண்டிய கட்டணம் உட்பட எல்லா விவரங்களையும் ஒரே ஒரு தாளைப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆவணம் தயாரித்து அதை ஒரு ஃபைலிலும் போட்டுக் கொடுத்துவிட்டான். அதே போல் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு முரளியால் நல்ல முறையில் தீர்வு காணமுடியும் என்று பழனியப்பன் நம்பி அனுப்புகிறார். ஆனால் சசிகலாவுக்கு முரளிமேல் உள்ள கோபத்தால் இது பிடிக்கவில்லை. நிறைய இடங்களில் இப்படித்தான் உண்மையான திறமையை காழ்ப்புணர்ச்சி கீழே தள்ளிவிட முயற்சி செய்கிறது.


முரளி வந்ததும் சொர்ணாம்பிகா சொன்ன விவரங்களை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக் கொண்டான். பிறகு அவன் கேட்ட முதல் கேள்வி, “மேடம்...மற்ற டீச்சர்ஸ் எல்லாம் என்ன செய்யலாம்னு சொல்றாங்க?...அந்த விவரம் தெரிஞ்சா எனக்கு உதவியா இருக்கும்...ஒருவேளை, அதுவே சரியான யோசனையா கூட இருக்கலாம். என்பதுதான்.


சொர்ணாம்பிகாவுக்கு தன் கணவர் ஏன் முரளிமேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று புரிந்து விட்டது.

விஷ்ணுப்ரியா...நீங்க சொல்லுங்க...”என்று முதல்வர் சொன்னார்.


சார்...சசிகலா மேடம் எல்லாரையும் சந்தேகப்படுறதுக்கு பதிலா குறிப்பிட்ட மூணுபேரை மட்டும் சோதனை போட்டாலே உண்மை தெரிஞ்சுடும்னு சொல்றாங்க. ஆனா எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே புரியலை. அந்தப் பசங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு.”


எந்த மூணு பேர் மேல சந்தேகம்? ”


விஷ்ணுப்ரியா விவரம் சொன்னார்.


மேடம்...உங்களை நினைச்சு நான் பெருமைப்படுறேன். உறுதியான முடிவு எடுக்க முடியலைன்னாலும் பசங்க மனசு வீண்பழியை சுமக்கக் கூடாதுன்னு நினைக்குறீங்க. ஆசிரியர் பணிக்கு முக்கிய தகுதிகள்ல இதுவும் ஒண்ணு.

கல்வியை முழுஅளவுல வியாபாரமாக்குறவங்க பெருகிட்ட இந்தக் காலத்துல ஒவ்வொரு வகுப்புலேயும் மூணு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க இந்தப் பள்ளி நிர்வாகம் முடிவு பண்ணியிருக்குறதே பெரிய விஷ­யம்.நம்ம இஷ்டத்துக்கு ஏழைங்கதான் காசை எடுத்துருப்பாங்கன்னு கண்மூடித்தனமா நம்பி அவங்களை சோதனை போட்டா என்ன ஆகும் தெரியுமா?... அவங்களே இந்த பணக்கார பள்ளிக்கூட சகவாசம் நமக்கு வேண்டாம்னு ஒதுங்கி ஓடிடுவாங்க.இல்ல...வேற ஏதாவது தப்பான முடிவை எடுத்துடுவாங்க.”என்று முரளி சொன்னபோது, சசிகலா குறுக்கிட்டார்.


அவங்க எடுத்துருந்தாங்கன்னா? ”


அதைப் பத்தி அப்புறம் யோசிப்போம்.” என்ற முரளி, மற்ற ஆசிரியைகளை அவரவர் வகுப்புக்கு போகச் சொல்லிவிட்டு சொர்ணாம்பிகா, விஷ்ணுப்ரியாவுடன் ஐந்தாம் வகுப்புக்குச் சென்றான்.


விஷ்ணுப்ரியாவிடம்மேடம்... அந்தப் பொண்ணைக் கூப்பிடுங்க.” என்றதும், ஸ்ருதி வகுப்பாசிரியையின் உத்தரவை எதிர்பார்க்காமலேயே எழுந்து அருகில் வந்தாள். அழுததில் கண்கள் சிவந்திருந்தன. கன்னங்களில் கண்ணீர்க் கோடுகள்.ஸ்ருதி அழுததுக்கு என்ன காரணம்னு உங்களுக்கு தெரியுமா? ”என்று அமர்ந்திருந்த மாணவர்கள், மாணவிகளைப் பார்த்து முரளி கேட்டதும், “இருநூறு ரூபா பணம் காணாமப் போயிடுச்சு சார்...”என்று அவர்கள் போட்ட சத்தத்தால் முரளி, விஷ்ணுப்ரியா ஆகியோர் காதுகளைப் பொத்திக்கொண்டனர்.


நீங்க பதில் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல...”என்று ரஜினிகாந்த் ஸ்டைலில் முரளி பேசிக் காண்பித்ததும் மீண்டும் குழந்தைகளின் உற்சாகக் கூச்சல்.


சரி...போதும். இத்தோட நிறுத்திக்குவோம்.”


உடனே  ஒருவன்,  “இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே சார்...என்றான்.


அது சரி... உங்களுக்கு பாடத்தெரியுமா...”


ஓஹோ...”மீண்டும் கோரசாக பதில்.


சரி...நான் அலுவலக அறைக்கு போறேன். நீங்க ஒவ்வொருத்தரா வந்து எனக்கு பாட்டு பாடிக் காட்டுங்க. பாடத் தெரியாதவங்க கதை சொல்லலாம். ஏன்னா எனக்கு கதை ரொம்ப பிடிக்கும். .கேவா...”


ஓஓஓஓஓக்கே...”என்று மீண்டும் வகுப்பறை அதிர்ந்தது.


நல்லா பாட்டு பாடுனவங்கள்ல ஒருத்தருக்கும், பிரமாதமா கதை சொன்னவங்கள்ல ஒருத்தருக்கும் நாளைக்கு காலையில  பிரேயரின்போது பேனா பரிசா தருவேன். ”என்று முரளி சொன்னதும் பாதி மாணவ மாணவிகள் அப்போதே எழுந்து தயாராகிவிட்டார்கள்.


முதல்ல எல்லாரும் உட்காருங்க... வருகைப்பதிவேட்டுல உள்ள வரிசைப்படிதான் வரணும். ஆனா ஒரு வி­ஷயம். இருநூறு ரூபாயை எடுத்தது யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன். ”என்று சொன்ன அதே நொடியில் எல்லாரையும் நோட்டம் விட்டுக்கொண்டான்.


என்கிட்ட பாட்டுப்பாடிக் காண்பிக்க அறைக்குள்ள வரும்போது அவங்களாவே கொடுத்துட்டா நான் அடிக்க மாட்டேன். வேற யாரும் அடிக்கவும் விட மாட்டேன். அவ்வளவு ஏன், பணத்தை தொலைச்ச ஸ்ருதிக்கே வி­ஷயத்தை தெரியாம பண்ணிடுவேன்


ஆனா என்னைய ஏமாத்தணும்னு நினைச்சா அவ்வளவுதான். எல்லார் முன்னாடியும் உண்மையை சொல்லிடுவேன். அப்புறம் யாருமே பணத்தை எடுத்தவங்க கூட சேர மாட்டாங்க.”


முரளியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவனுடைய கணிப்பும் சரியாக இருந்தது. மீண்டும் சசிகலாவுக்கு ஒரு சறுக்கல். பணத்தை எடுத்த மாணவனின் தந்தையும் தாயும் அரசுப்பணியில் இருப்பவர்கள். சசிகலாவின் யோசனைப்படி அந்த ஏழை மாணவர்களை சோதனைப் போட்டிருந்தால் அவர்கள் மனதளவில் நொறுங்கியிருப்பார்கள்.


மறுநாள்.


என்ன முரளிசார்...இன்னைக்கு காலையிலேயே வந்துருக்கீங்க... ”என்றாள் விஷ்ணுப்ரியா.


பிரேயர்ல கலந்துக்கதான். ”


இதைக்கேட்ட விஷ்ணுப்ரியா தலையை லேசாக சாய்த்து  “பார்றா...”என்றதை முரளி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து


நேத்து ரெண்டு பசங்களுக்கு பேனா பரிசா தர்றதா சொல்லியிருந்தேனே. அதான். கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்ல.” என்றான்.


மறுபடியும் பார்றா... ”என்ற விஷ்ணுப்ரியாவுக்கு


ஓயாம எல்லாம் இந்த மூஞ்சியைப் பார்க்க முடியாது. ”என்ற பதிலடி முரளியிடமிருந்து வந்ததும் அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.


முறைக்காதீங்க மேடம். சும்மா ஜாலிக்கு...” என்று அவன் சொல்லிவிட்டாலும் விஷ்ணுப்ரியாவின் மனம் சமாதானமாகவில்லை.


பள்ளிக்கூடத்துல படிச்ச காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எவ்வளவு பேர் நான் பார்க்க மாட்டேனான்னு ஏங்கிகிட்டு இருக்காங்க... இவன் ரொம்ப சாதாரணமா இந்த மூஞ்சியை அடிக்கடி பார்க்க முடியாதுன்னு சொல்றானே...இனி நாமளும் இவனைப் பார்க்கவே கூடாது.’என்று நினைத்துக்கொண்டாள்.


ஆனால் அவள் மனம், கடிவாளம் போட நினைத்தபின்புதான் அதிகமாக தறிகெட்டு ஓடும்...ஒருநாள்கூட அவனைப் பார்க்காமல் இருக்க அனுமதிக்காது என்று அவளுக்கு அப்போது புரியவில்லை.


பிரேயரின்போது முரளி,  “ஸ்ருதியோட பணத்தை எடுத்தவங்க என்கிட்ட கொடுத்துட்டாங்க. ஆனா அது யாருன்னு உங்க யாருக்கும் நான் சொல்ல மாட்டேன். இனிமே யாரும் இப்படி தப்பு பண்ணக்கூடாது. எப்படியும் எனக்கு தெரிஞ்சுடும். மறுபடியும் இந்த மாதிரி தப்பு செஞ்சா என்னோட  தண்டனை   முறைகள்  கடுமையா     இருக்கும். ”  என்று சொல்லிவிட்டு, கதை மற்றும் பாட்டுக்காக இரண்டுபேருக்கு பேனா பரிசாக வழங்கினான்.


முரளியின் ஆலோசனைப்படி ஒரு விடுமுறைதினத்தன்று ஸ்ருதியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்திருந்தனர்.


சார்...உங்க வசதியைக் காண்பிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதுக்காக ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு எதுக்கு சார் இருநூறு ரூபா...எங்க பள்ளி வேன் மூலமா உங்க வீட்டுலயே கொண்டுவந்து விட்டுடுறோம். இல்லன்னா நீங்களே வந்துதான் அழைச்சுட்டு போகணும். அப்புறம் பணத்துக்கு தேவை எங்க இருக்கு?...


உங்கமேலயும் எங்க மேலயும் நம்பிக்கை வைங்க சார்... மிதமிஞ்சிய செல்லம், அளவுக்கு அதிகமான பணம் பிள்ளைகளை திசை மாத்திடும்என்று முரளி பேசிய அனைத்தும் மிகவும் நியாயமான கருத்துக்கள் என்பதால் அவர்களால் ஆட்சேபம் தெரிவிக்க இயலவில்லை


அதே நாளில் வேறொரு நேரத்தில் இருநூறு ரூபாயை எடுத்த மாணவனின் பெற்றோரும் வந்திருந்தார்கள். அதுவும் முரளியின் கோரிக்கைதான்.


சார்...உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்குற பையனால எவ்வளவு பிரச்சனை தெரியுமா? இவனை கேம் சென்டருக்கு அழைச்சுட்டுபோய் வீடியோ கேமுக்கு அடிமையாக்கிட்டான்.”


சார்...இப்ப அவன்கூட சேரக் கூடாதுன்னு இவனைக் கண்டிச்சுட்டேன். அதுக்கு காசு கூட கொடுக்குறது இல்லை. ”என்றவரின் குரலில் பெருமிதம்.


சரிதான். முதல்ல அவிழ்த்து விட்டுட்டு இப்ப கட்ட முயற்சிக்கிறீங்க. அதோட விளைவு என்னன்னு தெரியுமா... ஒரு பொண்ணோட இருநூறு ரூபா பணத்தை எடுத்துட்...”என்று முரளி முடிக்கும் முன்பே அவர் தன் மகனை அடிக்கப் பாய்ந்தார்.


சார்...முழுசா கேளுங்க...”என்ற முரளியின் குரல் அதட்டும் தொனியில் இருந்தது.


மற்றவர்களுக்கு தெரியாமல் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க தான் எடுத்த முயற்சியைப் பற்றிக் கூறியதும், அந்த சிறுவனின் பெற்றோர் கண்களில் மரியாதை தெரிந்தது.


இப்ப இவனை அடிச்சு உதைக்கிறதால தீர்வு கிடைக்காது.அவன் கவனத்தை நல்ல வழியில திருப்பணும்னா நீங்க தொலைக்காட்சிக்குரிய நேரத்தை குறைச்சுட்டு அவனோட பழகணும்....”என்றதோடு மேலும் சில யோசனைகளை சொன்னான்.


அவர்கள் போனபிறகு சொர்ணாம்பிகா, “மிஸ்டர் முரளி...இந்த சின்ன வயசுலயே இவ்வளவு நிதானமா நடந்துக்க உங்களால எப்படி முடியுது?  ”என்றார்.


என்னுடைய ஆசிரியர்தாங்க காரணம். அவரோட தண்டனைகளே வித்தியாசமா இருக்கும். பள்ளிக்கூடத்துல இருந்த பூச்செடிகளை ஒருத்தன் சும்மா உடைச்சுப் போட்டான். அடுத்தநாளே விதவிதமா பத்து பூச்செடிகளை நட்டு  அந்தப் பையன்தான் தண்ணி ஊற்றி பராமரிக்கணும்னு சொல்லிட்டாரு. அதுல பூக்குற பூக்களைப் பறிச்சு பூஜையும், திங்கள்கிழமையில தேசியக்கொடி ஏற்றும்போது அதுல வெச்சு கட்டுறதும் அந்தப் பையனோட பொறுப்புதான்அதுக்கப்புறம் அவன் பூச்செடிகளை உடைச்சதா எனக்கு நினைவில்லை.


அவ்வளவு ஏன்...நான் கூட எட்டாம்வகுப்பு படிச்சப்ப சார் உட்காருற நாற்காலியை உடைச்சுட்டேன். அவர் என்கிட்ட பணமெல்லாம் கேட்கலை. என் அப்பாகிட்ட சொல்லி ஒரு லீவு நாள்ல பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டு வந்தாரு. எதுக்குன்னு பார்த்தா, பள்ளிக்கூடத்துல உடைஞ்ச பெஞ்ச், நாற்காலிகளை சரிசெய்ய வந்த கார்பெண்டருக்கு என்னைய ஹெல்ப்பரா ஆக்கிட்டாரு. அவருகிட்ட படிக்க குடுத்து வெச்சிருக்கணுங்க...”என்று முரளி பழைய நினைவுகளில் மூழ்கி விட்டான்.


அதன்பிறகு வந்த நாட்களில் முரளியுடன் பேசக்கூடாது என்றுதான் விஷ்ணுப்ரியா நினைப்பாள். ஆனால் அவனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கவே முடியாது என்ற அளவுக்கு அவள் மனம் சண்டித்தனம் செய்யத் தொடங்கியிருந்தது.


சில விடுமுறை நாட்களில் மட்டும் போன் செய்து அவனுடன் பேசிய பழக்கம் வளர்ந்து கொண்டே போனது. சட்டென்று ஒரு நாள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முரளியிடம் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு போன் செய்தாள்.


ஆனால் அவனே முந்திக் கொண்டு, “உன்னைய கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன்...நீ என்ன சொல்ற...”என்றான்.


மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன விஷ்ணுப்ரியாவால்  சட்டென்று எதுவுமே பேச முடியவில்லை. “இத்தனை நாளா எந்த ஆசைகளும் இல்லாதமாதிரி நடிச்சு என்னைய தவிக்க விட்டுட்டியேடா திருட்டு ராஸ்கல்.”என்று உற்சாகமாகப் பேசினாள்.


அடுத்த நொடியே அவனிடமிருந்து அவளுடைய மகிழ்ச்சியைக் குலைக்கும் விதமான பேச்சு வந்தது.


ஆனால் ஆசிரியரா இருக்குறவங்களுக்குன்னு சில சுயக் கட்டுப்பாடு வேணுமே. ஏன்னா பெத்தவங்களுக்கு அடுத்தபடியா ஒருத்தரோட கேரக்டரை தீர்மானிக்கிறது ஆசிரியரோட நடவடிக்கைகள்தான். ”என்று முரளி பேசியதும் விஷ்ணுப்ரியாவால் தன் மன எண்ணங்களை அடக்கிவைக்க முடியவில்லை.


டீச்சரா இருக்குறதால ஜடம் மாதிரிதான் வாழணுமா...எனக்குன்னு ஆசைகள், உணர்ச்சிகள் இருந்தா அதையயல்லாம் குழிதோண்டிப் புதைச்சிடணுமா?  ” என்று பேசியவளுக்கு அழுகையே வந்துவிட்டது.


ஹேய்...ப்ரியாக்குட்டி எதையும் புதைச்சுட சொல்லலை. எதுக்கும் இடம், பொருள், ஏவல் உண்டுன்னு சொல்ல வர்றேன். இப்ப நான் பார்க்குற வேலையில நிறைய விஷயம் கத்துக்கிட்டாலும் சம்பளம் இப்ப மட்டுமில்லாம எதிர்காலத்துக்கும் திருப்தியா இருக்காது. அதனால நான் வேற வேலைக்கு முயற்சி செய்யுறேன். அதுல சேர்ந்ததுக்கு அப்புறம்  ‘என்னடி ப்ரியா  ’  ன்னு உன்கிட்ட பேசுற உரிமையை எடுத்துக்குறேன்.”


அப்ப அதுவரைக்கும்?...”


வணக்கம் மேடம்...இன்னைக்கு ஸ்டூடண்ட் யாராவது பணம் குடுத்துருக்காங்களா?...எத்தனை ரசீது போடணும்?  ”என்று முரளி பேசியதும் சந்தோ­த்தில் சிரித்த விஷ்ணுப்ரியாவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

**************************
பாடத்திட்டத்துக்குள் கதைகள் விடலாமா? (சமச்சீர் கல்வி)
ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிக்குற பழக்கம் இருக்கான்னு கேட்டா, நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா?

அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. வீட்டுக்கே வர்ற நாளிதழ்களைக்கூட படிக்க முடியலைன்னு ரொம்ப சலிப்பா பேசுவாங்க. இந்த பதிலைக் கேட்டு சார் ரொம்ப பிசி அப்படின்னு  நினைத்தால் நீங்கதான் .... அர்த்தம் புரியலையா?அதுதான் சார் - உங்களை விட அப்பாவி உலகில் இல்லை.


ஏன் இப்படி சொல்றேன்னா, கால் மணி நேரம் நாளிதழ் படிக்க ஒதுக்க முடியாத நம்ம தலைவர் (நீங்க கட்சித்தலைவர்னு நினைச்சுக்காதீங்க...அவங்களுக்கு படிக்கத்தெரியலைன்னாலும் உதவியாளரை வைத்தாவது நாளிதழ்கள்ல வந்துருக்குற செய்திகளை தெரிஞ்சுக்குவாங்க. ஏன்னா அவர் கட்சியில இருக்காரா இல்லையான்னு அறிவிக்கிற ஆராய்ச்சி மணியே செய்த்திதாள்கள்தான். நான் சொன்னது குடும்பத் தலைவரைப் பற்றி.)  நடு ராத்திரி வரை தொலைக்காட்சியில மூழ்கி இருப்பார்.


அட...பெரியவங்களை விட்டுடுவோங்க. சின்னப் பசங்களை எடுத்துக்குங்க...வீட்டுப்பாடம், பள்ளிப்பாடம் அது இதுன்னு அவங்க தலையில அதிகமான சுமையை ஏற்றி வைக்கிறதால பாடப் புத்தகம் தவிர மற்ற எதையும் வாசிக்க அவங்களை நாம விடுறதே இல்லை.


பாடத்தை அளவுக்கு அதிகமா படிக்க வெச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வங்கி நிறைய சம்பாதிக்க வைக்கிறதெல்லாம் சரிதான். இப்படி உயர்ந்த நிலையில இருக்குற பலர் சின்ன சின்ன விஷயத்துல கூட ஒரு நேர்மை, அடுத்தவர்களுக்கு துன்பம் தராமை போன்ற குணங்கள் அப்படின்னா என்னன்னே தெரியாம இருக்காங்க.


வாகனங்களை மற்றவர்களுக்கு இடையூறா நிறுத்துறது, அடுத்தவங்க காதைக் கிழிக்கிற அளவுக்கு தடை செய்யப்பட்ட ஒலி அளவுக்கும் அதிகமா ஹாரன் வெச்சுக்குறது, பேராசை காரணமா குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கும் வழியில ஈடுபடுறது, (லஞ்சமும் இதில் தான் வருகிறது) தனக்கு கீழே அல்லது தன்னிடம் பணிபுரியும் நபர்களுக்கும் குடும்பம் சில பொறுப்புகள் இருக்கும் என்பதை மறந்து பல வகைகளிலும் துன்பம் கொடுப்பது என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.


இதற்கெல்லாம் முக்கிய காரணம், நமது கல்விமுறை பணம் சம்பாதிக்க உதவும் அளவுக்கு பண்புகளை கற்றுத்தருவதில்லை. கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலக நீதி, தெனாலிராமன், மரியாதைராமன், பீர்பால், விக்கிரமாதித்தன் ஆகிய கதைகள் உட்பட பல நூல்கள் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யப் பட்டால் நிச்சயம் பலன் இருக்கும்.


இவற்றை படிப்பதால் எல்லாரும் மகாத்மாவாகிவிடுவார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களாக  மாட்டார்கள் என்று கூற முடியும்.


இந்த கதைகளை பாடத்திட்டமாக்குகிறேன் என்று வழக்கம் போல் தெனாலிராமனின் சிறுகதை ஒன்றை வரி மாறாமல் எழுதுக அப்படின்னு கேள்வி கேட்டுட்டா அவ்வளவுதான். நம்ம பசங்களுக்கு இந்த கதைகள் மேல வெறுப்பு வர வேற காரணமே தேவையில்லை.


ஒவ்வொரு வாரமும் ஒரு ஐந்து கதைகளை பற்றி மாணவர்கள் நினைப்பது என்ன என்று சொந்த நடையில் மனதில் தோன்றுவதை எழுத சொல்லி அதற்கு மதிப்பெண் அளிக்கலாம்.


ஆண்டுத்தேர்வுகளின் மார்க்குகளுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.


**************************************************************************************
சிமுலேட்டர் வெச்சு கத்துகுடுப்போமா? (சமச்சீர் கல்வி)

சிமுலேட்டர்னா என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால இது தேவைப்படுற அளவுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சுக்குவோம். இப்ப நிறையபெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களை வாங்கிக்கொடுக்குறாங்க. இது சரியா?

நாங்க சம்பாதிக்கிறோம். செலவு பண்றோம்...இவனுக்கு ஏன் எரியுதுன்னு உங்க மனசுலயே என்னைய திட்டுறீங்க...புரியுது.

எனக்கு எரியலைங்க... அகால மரணத்தால இறந்தவங்க வீடுகள்ல போய்ப் பாருங்க. அந்த குடும்பத்துல அவதிப்படுறவங்க வயிறு எரியுறது தெரியும்.


ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், சாலை விதிகள் பற்றி அறியாமை அல்லது மதிக்காமை இவைகள் மட்டுமே எண்பது சதவீதம் விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது. மற்றவரின் தவறும், வாகனக் குறைபாடும் இருபது சதவீத அளவுக்குதான் இருக்கும்


சைக்கிளோ, மோட்டார் வாகனமோ இவற்றில் எதை இயக்கினாலும் தொண்ணூறு சதவீத பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு சைகை எதுவும் செய்யாமல் திரும்புவது, யாராவது தெரிந்தவர்களைப் பார்த்தால் அப்படியே நின்று பின்னால் வருபவரை அலறி ஓடச் செய்வது  இதெல்லாம் கை வந்த கலை.( பெரியவர்களும் பல நேரங்களில் இப்படி செய்வது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.) 


சாலையைக் கடப்பவர்கள் அல்லது வாகனம்  திடீரென்று எதிர்ப்படுவது போன்ற சிக்கலான சூழ்நிலையில் எப்படி சமயோசிதமாக விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மிக மிக குறைவு. பல நேரங்களில் அவர்கள், பதட்டத்தில் எதிரில் வருபவரையும் சேர்த்து கீழே தள்ளி விடுவார்கள்.


முறையான பயிற்சி இல்லாமல் அதிக சி.சி வாகனங்களை எடுத்து வந்து விபத்து ஏற்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.


படிக்கும் வயதில் இந்த பிரச்சனை என்றால் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கும் போது மது அருந்தி வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி இதை தவறு என்று மனதில் கூட நினைக்க மாட்டேன் என்ற போக்கு எந்த விளைவை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா?


ஒரு மணி நேரத்தில் சாலை விபத்தால் பதிமூன்று பேர் உயிரிழக்கிறார்கள் என்பது பதிவாகும் புள்ளி விபரம் என்றால், உண்மை நிலவரம் என்னவாக இருக்கும். இவற்றில் மதுவின் பங்கு பற்றி அறிய வரும்போது வேதனையாக இருக்கிறது.


இப்போதுள்ள தலைமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உயிர், பணம் அனைததையும் இழந்துகொண்டிருக்கிறது. இவர்களை மீட்பது இருக்கட்டும். வளரும் மாணவர்களை காக்கும் பொறுப்பு அதைவிட அவசரம், அவசியம்.


மது அருந்துபவருக்குதான் நேரடி பாதிப்பு. ஆனால் அவர் அந்த நிலையில் வாகனம் இயக்கும் போது அப்பாவிகளும் துன்பப்படுகிறார்களே. சாலைவிதிகளை மதிக்காத போதும் ஏறக்குறைய இதே விளைவுதான்.


சாலைவிதிகள் பற்றிய முழு விபரம், இவற்றை மதிக்காததால் ஏற்படும் விபத்துக்கள், விபத்துக்களில் ஒருவர் செய்யும் தவறால் இது எதிலும் சம்மந்தப்படாத நபர் எப்படி பாதிக்கப் படுகிறார், விபத்தில் ஒருவர் மரணமடைந்த பிறகு அல்லது படுகாயமடைந்த பின்பு பொருளாதார ரீதியாகவும் இன்னும் பிற வகைகளிலும் எவ்வளவு தூரம் பாதிப்பு அடைகிறார்கள் - இது போன்ற விஷயங்களை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்படியான பொதுப் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்.


இது தொடர்பான குறும்படங்கள் தயாரித்து பள்ளிகளில் திரையிட்டால் நல்ல பலன் இருக்கும். ஏனெனில், ஒரு விஷயம் சிறு வயதிலேயே தவறு என்று அழுத்தமாக பதிந்து விட்டால் அவன் வளர்ந்த பிறகு மோசமான அளவு பாதை மாற மாட்டான்.


ஆளில்லா சாலையில் ஒரு வாரம் ஓட்டிவிட்டு உரிமம் பெற்று விடுகிறார்கள். பிறகு போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் நாலு சக்கர வாகனத்தை  இயக்குவதால் பொதுவாக எல்லாருக்குமே சிரமமாகத்தான் இருக்கும்.


இப்போது சிமுலேட்டர் விஷயத்துக்கு வருகிறேன்.


கிளிக்கூண்டு போன்ற இந்த இயந்திரத்தில் அமர்ந்து கார் ஓட்ட பயிற்சி எடுத்தால் விரைவில் பதற்றம் நீங்கி விடும்., சென்னை அண்ணாசாலையின் சூழலில் கூட இயந்திரத்தின் உள்ளே இருந்து ஓட்டிப் பார்க்கலாமாம்.


ஒன்பதாம் வகுப்பு முதல் இந்த செய்முறைப்பயிற்சியையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.


யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா... அப்படின்னு இழுக்குற சத்தம் எனக்கு கேட்குதே...


எந்த அருமையான யோசனையும் முதல்ல கேலிக்குரிய, சாத்தியமில்லாத விஷயம் மாதிரிதான் தெரியும். சிரமத்துடன் அதை நடைமுறைப்படுத்தின பிறகு கிடைக்கக்கூடிய பலனைப் பார்த்து இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாமோ... அப்படின்னு நினைக்கத் தோணும்.


இதுதாங்க காலம் காலமா இருந்து வர்ற வரலாறு.

**********************************************************************
தீக்குளிக்கிறது என்ன அவ்வளவு சுலபமா?
சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு என்று இன்றைய (26 பிப்.) தினத்தந்தி நாளிதழின் ஒரு பக்கத்தில் பத்து வரியில் ஒரு சிங்கிள் கால செய்தி வெளிவந்திருந்தது என் கவனத்தில் படக் காரணம் சம்பவம் நடந்தது நாங்கள் வசித்து வந்த பகுதியில்.

நாளிதழில் நான் பக்க வடிவமைப்பாளராக பணியாற்றியபோது வயிற்று வலியால் தூக்குப்போட்டுக்கொண்டது, சமையல் செய்யும் போது தீப்பிடித்து பெண் பலி போன்ற செய்திகளை 'இதுக்கெல்லாம் வேற எதாவது காரணம் இருக்கும்.' என்று இயல்பாக சொல்லிவிட்டு அந்த மேட்டரை சட்டென்று ஓரங்கட்டிவிடுவார்.


நைட்டி அணிந்திருந்த 30வயது பெண் தீக்காயங்களுடன் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சை பெற்று (மரண அவஸ்தை பட்டு) உயிரிழந்திருக்கிறார். சமையல் செய்யும்போது விபத்து என்று கேஸ் முடிந்துவிட்டது. வெளி உலகுக்கு தெரிந்த செய்தி இவ்வளவுதான்.

இது போன்ற ஒவ்வொரு மரணங்களுக்குப் பின்னும் என்னென்ன ரகசியங்களோ. இன்றைய செய்தியில் இடம்பெற்ற பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையு உண்டு. அந்த பெண் குழந்தைக்கு இரண்டிலிருந்து மூன்று வயது இருக்கலாம். அக்கம்பக்கத்தில் வந்த வாய் வழித்தகவல் அந்த பெண் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு கொளுத்திக் கொண்டாதாக. அந்தப் பெண்ணின் கணவனுக்கு குடிப்பழக்கம் உண்டு என்ற தகவலில் இருந்து மற்றவற்றை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.


பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உறவு வட்டத்தில் இருந்த பெண் இப்படித்தான் பத்து லிட்டர் மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திக்கொண்டு, வேறு தொடர்பு வைத்திருந்த கணவனை மிரட்டத்தான் இப்படி செய்தேன். என்னைக் காப்பாத்துங்க எரிச்சல் தாங்க முடியலை அப்படின்னு ஆஸ்பத்திரியில கதறியிருக்கிறார்.


கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை என்று தொடர்கதையாக இருக்கின்றன. கல்வி இவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்தது என்று யோசித்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எதையும் எதிர்த்துப் போராடலாம். ஆனால் அதற்கு உயிர் வேண்டும். உயிர் இருந்தா போதும். மத்ததெல்லாம் தூசு அப்படின்னு ஒரு தைரியத்தை வழங்காத கல்வி நம்ம சமூகத்துக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆபத்தை தந்துகிட்டே இருக்குன்னுதான் நான் சொல்வேன். (துரதிர்ஷ்டவசமா ஊழல் பேர்வழிகளும் கொள்ளக்காரங்களும்தான் இந்த தைரியத்தோட இருக்காங்க.)


உண்மையான கல்வின்னா அது திவ்யா மாதிரி சோதனைகளை சந்திக்கிறவங்க துணிச்சலோட உலகத்தை எதிர்த்துப் போராட கத்துக்கொடுக்கணும். அந்தப் பொண்ணைப் பார்த்து அவளோட தோழிகள் 'திருடி வர்றா...பணத்தை பத்திரமா வையுங்கன்னு ' சொன்னதாலதான் ரொம்பவும் அதிகமா மனசுடைஞ்சு போய் தவறான முடிவெடுத்துட்டதா நான் பத்திரிகைகள்ல படிச்சேன். அது உண்மையா இருக்குற பட்சத்துல இப்படி மனம் புண்படும்படியா (அதாவது பணம் அந்த பொண்ணுகிட்ட சோதனை போட்டு கிடைக்காதப்போ) பேசுறது தப்புன்னு சக தோழிகளுக்கு புரிஞ்சு நாகரிகமா நடந்துக்குறதுதான் கல்வியின் பயன் அப்படின்னு எனக்குத் தோணுது. இந்த அடிப்படை விஷயம் கூட தராத நம்ம கல்வி முறையில நிறைய மாற்றம் வேணும்னு மறுபடியும் எனக்கு சொல்லத்தோணுது.

*************************************
சாலை விபத்துக்களை தவிர்க்க என்ன வழி?

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பெரம்பலூர் பகுதி எப்போதுமே சாலை விபத்து என்ற பெயரில் உயிர்களைக் கொன்று குவிக்கும் பகுதிகளில் ஒன்றாகவே இருக்கிறது.

ஏனைய பகுதிகளில் விபத்தும் மரணமும் நிகழ்வதே இல்லையா என்று கேட்க கூடாது. சாலைகள் இருவழிப்பாதையாக இருக்கும்போதுதான் அஜாக்கிரதையால் வாகனங்கள் எதிர் எதிரே மோதிக்கொள்கின்றன என்று நான்கு வழிப்பாதைகளை அமைத்தார்கள். இப்போது வாகனங்கள் பெருகிய வேகத்தைவிட விபத்துக்கள் அதிகரித்திருக்கின்றன.


சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுனர்களின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 80 முதல் 140 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் சக்கரங்கள் உருளுவதை விட பறக்கின்றன என்றே சொல்லலாம்.


ஏதாவது ஒரு கனரக வாகனம் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும். பின்னால் பறந்து வரும் வாகன ஓட்டுனருக்கு இந்த வண்டி ஓட வில்லை, நின்று கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொள்வதற்குள் அதன் மீது மோதி கடுமையான சேதம் ஏற்பட்டு விடுகிறது.


உலகத்தரத்தில் நாலுவழிச்சாலையைப் போட்டு இருக்கிறோம் என்று சொல்லி சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை(?) அடிப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட இந்த சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க காட்டுவதில்லை.


ஏனெனில் நாலு வழிச்சாலைகளால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் விபத்து மிகவும் அரிதாகி விட்டது. ஆனால் இரவில், (சில நேரங்களில் பகலில் கூட) நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனம் மோதி அடிக்கடி உயிரிழப்பும், உடல் உறுப்பு இழப்பும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.


சாலையிலேயே இப்படி ஓரம் கட்டி நிறுத்தப்படும் வாகனம் பெரும்பாலும் லாரியாகத்தான் இருக்கும். இவை பழுதாகி நிற்பது என்பது அரிது. ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் அலட்சியமாக நிறுத்திவிட்டு செல்வதுதான் இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம்


சரியான காரணம் இன்றி இப்படி வாகனம் நிறுத்தப்படும்போது அந்த ஓட்டுனரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந்த கொடுமைகள் குறையும்.


2005ம் ஆண்டு தமிழகத்தில் கன மழையின்போது மாநிலம் முழுவதும் வெள்ளச்சேதத்தால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளும் பஞ்சராகி விட்டன. அப்போது சுமார் ஒரு மாத காலம் சாலை விபத்துக்கள் மிக, மிக, மிக குறைவான அளவில்தான் நடந்தன. அந்த ஒரு மாதத்தின் நாளிதழ்களைப் பார்த்தாலே தெரியும்.


இதற்கு காரணம், சாலைகள் மோசமானதாக இருந்ததால் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றிருக்கின்றன


ஆக மொத்தத்தில் வேகம்தான் முக்கிய வில்லன் என்பது புலனாகிறது.


இந்த பதிவில் நான் இணைத்திருக்கும் விபத்து படங்கள், திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் அரசு விரைவுப்பேருந்தும் தனியார் கல்லூரிப் பேருந்தும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியிருக்கும் காட்சி.


மூன்று கல்லூரிப் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகமாக வந்தன. அதைப் பார்த்து நான் பேருந்தை நிறுத்தி விட்டேன். இரண்டு பேருந்துகள் நூலிழையில் ஒதுங்கிச் சென்றுவிட்டன, ஆனால் இந்தப் பேருந்து நான் ஓட்டி வந்த பேருந்தின் மீது மோதிவிட்டது என்று அரசு விரைவுப்பேருந்து ஓட்டுனர் சொன்னார்.


ஒரு நாளிதழின் நிருபர் ஒருவர் ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னது, விபத்துக்குள்ளான கல்லூரிப்பேருந்தை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவர்தானாம்.


இந்த புகைப்படங்களைப் பார்த்தால் கல்லூரிப்பேருந்தின் இடப்பக்கம் ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு இடம் இருப்பது தெரியும். அந்த பேருந்து கட்டுப்பாடில்லாமல் அலைபாய்ந்து வந்தது என்று அரசுப்பேருந்தின் ஓட்டுனர் சொன்னது உண்மையாக கூட இருக்கலாம்.


108 ஆம்புலன்ஸ் அந்த விபத்துக்குள்ளான பேருந்தின் பக்க வாட்டில் நிற்கிறது. சாலையின் மையத்தில் இருக்கும் வெள்ளைக் கோடு எல்லையை ஒழுங்காக கவனித்தாலே பாதி பிரச்சனை இருக்காது. என்ன செய்வது விதி வலியது.


இது உண்மையாக இருக்காது என்று நாம் முழுவதும் புறந்தள்ளி விட முடியாது.என்னைப் பொறுத்தவரை நாலு வழிச்சாலையில் இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும், வாகனங்களும் வாகன ஓட்டிகளும் ஓய்வெடுக்க என்று பிரத்யேகமாக இருக்கும் இடம் தவிர வேறு எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அப்படி நிறுத்தி ஏதாவது விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் வாகனத்தை அலட்சியமாக நிறுத்தியிருந்த ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த அலட்சியம் குறையும்.


எல்லா இடங்களிலும் இரட்டை வழி ரயில் பாதை அமைத்து பஸ் போக்குவரத்து போலவே ரயில் போக்குவரத்தும் பெருகினால் இத்தகைய விபத்துக்கள் கணிசமாக குறைந்துவிடும்.


அவ்வளவு எண்ணிக்கையில் ரயில்களை இயக்கத்தேவையான கட்டமைப்புகளை செய்வது மிகவும் கடினம் என்றும், இதனால் பேருந்து போக்குவரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பார்கள் என்றும் சொல்வார்கள்.


உண்மையான காரணங்கள் இது இல்லை. டூரிஸ்ட் பஸ் என்று பர்மிட் வாங்கி வைத்து விட்டு தினமும் ஆம்னி பஸ் சர்வீஸ் நடத்தி கோடிகளில் புழங்கும் தொழிலதிபர்களின் ஆதரவு தேவைப்படும் அரசியல் வியாதிகளும் அவர்கள் நடத்தும் கேவலமான மோட்டல் வியாபாரம் பாதிக்கும் என்று பயப்படும் குண்டர்களும்தான் உண்மையான பிரச்சனை.


ஆனால் ரயில் போக்குவரத்து இரு வழிப்பாதையாக விஸ்தரிக்கப்பட்டால் பல வகையிலும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும். பெட்ரோலியப்பொருட்கள் இறக்குமதி இந்த அளவுக்கு தேவையிருக்காது. சுற்றுச்சூழலும் தப்பிக்கும். நாட்டு, வீட்டு பொருளாதாரமும் உருப்படும்.


ஆனால் மோட்டார் கம்பெனி முதலைகள் இதற்கெல்லாம் வழி விடுவார்களா?


அது சரி, நம் நாட்டில் எப்போதுமே சில லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான மக்களை பாதிக்கச்செய்வது வழக்கம்தானே.

********************************************************

2 comments:

  1. Bro !
    Why don't you store your e-paper in www.scribd.com

    ReplyDelete
  2. Bro !
    By the by add a share button in your blog .It enable people to share .search "Add to any " in Google

    ReplyDelete