Share

Tuesday, October 10, 2017

தமிழ் திரைப்படத்துறையை லாபம் பெற வைப்பது எப்படி? - பகுதி 1

தமிழ் சினிமாத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் நன்றாக இல்லை என்றாலும் அதனால் புகழும் செல்வமும் பெற்றிருப்பவர்கள் ஏராளம் உண்டு. ஆனால் தமிழ்த்திரைப்படத்துறை நன்றாக இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினால் இருக்கிறது என்று பதில் சொல்ல முடியவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை சிலர் ஏற்றுக்கொள்ள மறுப்பதால்தான் தமிழ் திரைப்படத்துறை தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

முடியும். தயாரிப்பாளர், நடிகர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள், ரசிகர்கள் என்று பலரும் சேர்ந்த கூட்டு முயற்சிதான் திரைப்படத்துறை. திரைப்படத்துறை இன்றைய நிலையில் மிகவும் ஆபத்தான சூழலில்தான் இருக்கிறது. அதற்கு திரைப்படத்துறை சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் சில மாற்றங்களை ஏற்றுகொண்டாக வேண்டும். அவற்றைப் பற்றி பார்த்து விட்டு கடைசியாக வரிவிகிதம் பற்றி அரசுக்கு என்ன வேண்டுகோள் வைக்க வேண்டும் என்பதைப்பற்றியும் பார்க்கலாம்.

நேரடியாக ஆள் மூலம் தகவல் பெற்றது முதல் தபால், தந்தி, பேக்ஸ், மொபைல், மின்னஞ்சல், வீடியோ சாட்டிங் என்று தகவல் தொடர்பு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் பெற்று மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.

எஸ்.டி.டி பூத்துக்கு சென்று போன் பேசிய காலம் போய், மொபைல் போன் 500 ரூபாய்க்கும் கிடைக்கிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.

புடவை, வேஷ்டி, சட்டை, பேண்ட் 100 ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் விலைகளில் கிடைக்கிறது.

கால்நடை, மாட்டு வண்டி, குதிரை வண்டியிலிருந்து தற்போது போக்குவரத்துக்கு சைக்கிள், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், பேருந்து, ரயில் வண்டி, கப்பல், விமானம் என்று நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப பயன்படுத்துகிறோம்.

இப்படி நம் சமூகத்தில் பலவற்றைப் பற்றி உதாரணம் காண்பித்துக்கொண்டே செல்லலாம்.

எல்லாவற்றிலும் நுகர்வோரின் வசதி, செலவழிக்கும் தன்மை உள்ளிட்டவைகளுக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுக்கும் வழிகள் இருக்கும்போது, திரைப்படங்களை மட்டும் திரையரங்கங்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைப்பது சரியாக இருக்க முடியுமா?

25 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலை நம் நாட்டில் பரவும் முன்பு பொழுது போக்கு என்றால் திரைப்படம், ஆர்க்கெஸ்ட்ரா, ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மட்டும்தான்.

இப்போது தினமும் 24 மணி நேரமும் தொலைக்காட்சியிலும், இணையத்திலும், ஸ்மார்ட்போனிலும் சினிமா, பேச்சு, பாட்டு அது இது என்று வீடியோக்கள் கிடைக்கும்போது மூன்று மணிநேரம் படம் பார்க்க குடும்பத்துடன் வருபவர்கள் குறைந்தது 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் எப்படி சரியானதென்று கூற முடியும்?

அரசு நினைத்தால் திருட்டு சி.டி, திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் தடுத்துவிடலாம். அப்படி தடுத்துவிட்டால் கூட தியேட்டர்களுக்கு கூட்டம் வரும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கட்டணம் அதிகம், படம் சரியில்லாமல் இருப்பது மட்டும் தியேட்டர்களில் கூட்டம் குறைய காரணம் இல்லை.

முதலில் திரையரங்கத்தில் படம் திரையிடப்படும் நேரத்தில் திரைப்படம் பார்க்க செல்லும் அளவுக்கு யாருக்கு நேரம் கிடைக்கிறது?

வேலையில்லாதவர்கள், வகுப்பை புறக்கணித்துவிட்டு வரும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் போன்ற மிகச் சிலர்தான் நேரம் கிடைக்கப்பெற்றவர்கள்.

ஏனென்றால் தற்போது எல்.கே.ஜி மாணவர்களுக்கே காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஷெட்யூல் இருக்கிறது. மேலும் அரசுப்பணி, தனியார் பணி என்று எந்த துறையாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் தினமும் பொழுது விடிவதற்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்பி நள்ளிரவில் வீடு திரும்புபவர்கள் உண்டு. இன்னும் பலர் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட கடுமையாக உழைக்கிறார்கள்.

தயாரிப்பாளரே சி.டி. மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் படத்தை 50 ரூபாய்க்கு ரிலீஸ் செய்தால் ஒரு படத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் 4 நாட்களில் கூட பார்த்துவிடுவார்கள்.

இப்படி செய்தால் கோடி கோடியாக முதலீடு செய்து திரையரங்கங்கள் கட்டி வைத்திருக்கும் நாங்கள் என்ன செய்வது என்று திரையரங்கு உரிமையாளர்கள் கேட்கலாம். அதற்கும் இந்த தொடரில் எனது யோசனையை கூறுகிறேன்.

அதற்கு முன்பாக பல விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

தொடரும்...

No comments:

Post a Comment