Share

Saturday, November 25, 2017

புத்தக விமர்சனம் - சுழிக்காற்று


இது வரை நான் படித்த புத்தகங்களில் அளவுக்கு அதிகமாக தொடக்கம் முதல் முடிவு வரை ஏகப்பட்ட அச்சுப்பிழைகளுடனும், நாலைந்து வரிகள் ஆங்காங்கே திரும்ப திரும்ப Copy & Paste ஆகி இருப்பதும் இந்த புத்தகத்தில்தான் என்று நினைக்கிறேன்.

எழுதியவர் கௌசிகன்
வெளியீடு : லட்சண்யா பப்ளிகேஷன்
5/4, காந்தி தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை -33

70களில் கல்கியில் வெளிவந்த தொடர்கதை... சுதந்திர இந்தியாவில் நடைபெறும் கதை. கதை நடக்கும் ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்பதால் 1960 முதல் 70 காலகட்ட சம்பவங்கள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. 

பண்ணை விவசாயம் செய்து வந்த ஒரு ஜமீன்தார், உலகப்போர் காலகட்டத்தில் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் காண்ட்ராட்க்ட் தொழில் செய்து கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி. யுத்தம் முடிந்து உணவு சப்ளை ஒப்பந்தம் இல்லை என்றாலும் இறைச்சி உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை பாதுகாக்க ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்ட மெகா குளிர்சாதன பெட்டி (ஃப்ரிட்ஜ்) இன்னும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருப்பதாக கதையில் இடையிடையே சொல்லப்படுகிறது. அந்த பண்ணை தொடர்பான ஊழியர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவதும், மர்ம முடிச்சுகள் அவிழ்வதும்தான் கதை.

ஜமீன்தார் தர்மலிங்கம் படுத்த படுக்கையில் இருக்கிறார். ஜமீன்தாரின் மகன் கந்தசாமியும் படுக்கையில். கந்தசாமியின் மனைவி ஒரு மகள் மஞ்சுளாவை விட்டுவிட்டு இறந்துவிட்டதால் கோகிலாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

தர்மலிங்கம் இறந்துவிட, அவரது அடக்கம் முடிந்தவுடன் மஞ்சுளா திரும்ப ஊருக்கு புறப்படுகிறாள். ரயில் ஏறுவதற்குள் படுக்கையில் இருந்த கந்தசாமியும் இறந்த தகவல் எதேச்சையாக தெரிய வர, மஞ்சுளா ஊருக்கு செல்லாமல், தந்தையின் உடலை பார்க்க வருகிறாள். அவரது உடலும் அவசர அவசரமாக புதைக்கப்படுகிறது. மஞ்சுளாவின் காதலன் துப்பறிகிறான்.

முடிவில் தர்மலிங்கம் இறக்கும் முன்பே 15 நாட்களுக்கு முன்னதாக புயல்காற்று அடித்த நாள் அன்றே கந்தசாமி இறந்துவிடுகிறார். கந்தசாமி இறந்ததை வெளியில் சொல்லாமல் மெகா பிரிட்ஜ்-களில் வைத்து பாதுகாத்து, தர்மலிங்கம் அடக்கம் முடிந்த அன்று இரவே கந்தசாமியும் இறந்து விட்டதாக வெளியில் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

தர்மலிங்கத்துக்கு முன்னதாகவே கந்தசாமி இறந்து விட்ட விஷயம் தெரிந்த நர்ஸ், கணக்குப்பிள்ளை, நர்ஸ்-ன் அண்ணன், இந்த உண்மை தெரிந்த அந்த ஊர் டாக்சி டிரைவர் ஆகியோர்தான் கதையின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொருவராக கொல்லப்படுபவர்கள்.

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த நபர் இறந்தவர் பற்றிய செய்தியை ஏன் அவர் தந்தை இறக்கும்வரை உலகத்துக்கு தெரியவிடாமல் வைத்து விட்டு பிறகு வெளியில் சொல்லப்பட வேண்டும்?

தர்மலிங்கம் இறந்த பிறகு அவர் மகன் கந்தசாமி இறந்தால் மொத்தம் உள்ள 4 கோடி சொத்துக்களில் (இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950 அல்லது 60களில் 4 கோடி என்று கதை புனையப்பட்டுள்ளது.) கந்தசாமியின் இரண்டாவது மனைவி கோகிலாவுக்கு 2 கோடியும், முதல் மனைவியின் மகள் மஞ்சுளாவுக்கு 2 கோடியும் கிடைக்கும்.
ஆனால் தர்மலிங்கத்துக்கு முன்பே கந்தசாமி இறந்து விட்டால் கந்தசாமியின் பெயரில் உள்ள சுமார் 6 லட்சம் தொகை கூட சரி பாதியாக இரண்டாவது மனைவி கோகிலாவுக்கும், மகள் மஞ்சுளாவுக்கும் செல்லும். தர்மலிங்கம் இறப்புக்கு பின்னர் 4 கோடி சொத்தும் பேத்தி மஞ்சுளாவுக்கு மட்டும் சொந்தம் என்று உயில் இருப்பதால்தான் கந்தசாமி அவரது தந்தை தர்மலிங்கத்துக்கு முன்பாகவே இறந்ததை மறைத்து விடுகிறார்கள்.

இந்த சதித்திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

கந்தசாமி தன் தந்தைக்கு பக்கத்தில் இன்னொரு படுக்கையில் இருந்த நிலையில் புயல் அடித்த அன்று கந்தசாமி இறந்ததும் விஷயம் யாருக்கும் தெரியாமல் சீரியஸ் என்று மட்டும் வெளியில் சொல்லப்படுகிறது.

குடும்ப டாக்டருக்கு போன் செய்ததும் அவர் உடனடியாக வர முடியாத அளவுக்கு மழை, இன்னொரு கேஸ் அட்டண்ட் செய்தல் என்று தடங்கல் ஏற்படுகிறது. அடுத்த நாள் காலையில் வரும்போது கந்தசாமியின் இரண்டாவது மனைவி டாக்டரை சத்தம் போட்டு விரட்டிவிடுகிறாள். உங்களை நம்பி அவரை வெச்சிருந்தா இன்னேரம் இறந்திருப்பார். அதனால என் அண்ணன் டாக்டர்தான் அவரை வெச்சி இனிமே சிகிச்சை செய்துக்குறோம் என்று சொல்லவும் டாக்டர் குற்ற உணர்ச்சியில் ஒதுங்கி விடுகிறார்.

அடுத்து உண்மை தெரிந்த நர்சையும் வேலையை வீண் பழி சுமத்தி விட்டு விரட்டி விடுகிறார்கள். (பின்புதான் அவள் கொல்லப்படுவாள்) கணக்குப்பிள்ளையையும் கொலை செய்து, அவன் டிராக்டர் விற்ற பணத்துடன் ஓடிவிட்டதாக கதை கட்டி விடுவார்கள்.

ஜமீன்தார் தர்மலிங்கத்தையே மகனை பார்க்க விடமாட்டார்கள். ஏன், புது நர்ஸ், இரண்டாவது மனைவி கோகிலா, அவள் சகோதரனான டாக்டர் ஆகிய மூவரைத் தவிர வேறு யாருமே கந்தசாமியை பார்க்கவே முடியாது. யார் கேட்டாலும் அவருக்கு ஓய்வு தேவை என்று ஒரே பாட்டைப் பாடி அனுமதிக்கவே மாட்டார்கள். கந்தசாமியின் மகளைக்கூட தந்தையை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் அவள் கந்தசாமியை ஒரு முறை பார்த்து பேசுவார். (அது எப்படி பிணத்துடன் பேசினாள் என்று நீங்கள் கேட்கலாம். அது சஸ்பென்ஸ். வேண்டுமானால் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.) 

பிறகு தர்மலிங்கம் இறந்த பிறகு ஒரு நாளைக்குள்ளாகவே கந்தசாமி இறந்ததாக அறிவிக்கப்படும். அப்போது குடும்ப டாக்டர் வந்து, நான் கடைசியா உங்க அப்பாவுக்கு கழுத்துல இருந்த கட்டியை கிழிச்சு மருந்து போட்டேன். ஆனால் அந்த காயம் 15 நாளா கொஞ்சம் கூட ஆறாம இருந்துருக்கு என்று வியப்படைவார். அதை வைத்து கந்தசாமியின் உடல் 15 நாட்கள் ஃப்ரிட்ஜ்-ல் இருந்திருக்கும் என்று துப்பறிபவர் கண்டுபிடிக்கத்தொடங்குவதாக போகும் இந்த மர்ம நாவல்.

கதையை படித்ததும் உங்களுக்கு என்னென்னவோ தோன்றுகிறதா... நல்லது... அது எதையும் கமெண்ட்-டில் சொல்ல வேண்டாம். 

இதை எதுக்கு சொல்றேன்னா, 

நமக்கு ஏன் சார் வம்பு... இருக்குற எடம் தெரியாம இருந்துட்டு போயிடணும்....

*****************************************************
வாண்டுமாமா

இப்போது 32 வயதுக்கு மேல் இருப்பவர்களில் சிறு வயது வாசிப்பு பழக்கம் இருந்திருந்தால் வாண்டுமாமா என்ற பெயரை தெரியாமல் இருக்காது.


சிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக, குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.

நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம், நானும் என் சகோதர, சகோதரிகளூம் கல்கியில் வெளியான இவரது 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரத் தொடரினை விரும்பி வாசித்தோம். இப்பொழுதும் அச்சித்திரத் தொடரில் வரும் 'தூமகேது' என்னும் பாத்திரம் நினைவில் நிற்கிறது. பால்ய காலத்தில் எமக்குத் திகிலினை ஏற்படுத்திய பாத்திரங்களிலொன்று தூமகேது.

கல்கியில் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு இதழிலும் சிறுவர் விருந்து என்னும் பெயரில் ஓரிரு பக்கங்கள், அழகான வர்ணச் சித்திரங்களுடன் வாண்டுமாமா தயாரித்து வழங்கிய சிறுவர் பக்கம் வெளிவரும். எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. அதன் பக்கங்களைச் சேகரித்து அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தேன் ஏனைய தொடர்களைப் போல. அக்காலகட்டத்தில் ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் மாணவர் மலர் பக்கமும், கல்கியின் சிறுவர் விருந்து பக்கமும் (வாண்டுமாமாவின் தயாரிப்பில்) மிகவும் பிடித்த சிறுவர் பக்கங்கள். ஈழநாட்டின் மாணவர் மலர் என் மாணவப் பருவத்தில் என் எழுத்தார்வத்தை மிகவும் ஊக்கியது. கல்கியின் சிறுவர் விருந்தும், வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகளும் அந்த வயதில் என்னை மிகவும் ஈர்த்தவை.

தனது தொண்ணூற்றியொரு வயதில்  (12.6.2014),   வாண்டுமாமா இவ்வுலகை நீத்தார் என்னும் செய்தி சிறிது துயரத்தினைத் தந்தாலும் அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. தன் வாழ்க்கையையே சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். ஆனந்த விகடன் சஞ்சிகையில் 2012இல் எழுத்தாளர் சமஸ் இவருடன் கண்ட நேர்காணல் இவ்வாறு முடிவடைகின்றது:

‘‘கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஓர் எழுத்தாளராக இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா?’’

‘‘பெரிய புகார் ஒண்ணும் என்கிட்டே இல்லை. எப்போ கிடைக்கும் எப்போ போகும்னு தெரியாத வேலை, கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம்னே வாழ்க்கை கழிஞ்சுட்டாலும் குடும்பம் எனக்கு நெருக்கடியைத் தரலை. எனக்கு நாலு பெண் பிள்ளைகள். ஒரு பையன். எல்லாரும் இன்னைக்கு நல்லா இருக்காங்க. காரணம்... என் மனைவி. எழுதுறவன் வாழ்க்கையோட நெருக்கடிகளைப் புரிஞ்சு நடத்துக்கிட்ட புண்ணியவதி. இன்னைக்கும் பணக் கஷ்டங்கள் விட்டுடலை. ரெண்டு புஸ்தகங்கள் எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனா, பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே?’’

பணம் , பணம் என்று வாழ்க்கையையே பணத்துக்காக வீணாக்குவோர் மத்தியில் 'பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே' என்பதை நன்கு விளங்கி, தன் ஆற்றலை, சமூகப்பங்களிப்பை சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த எழுத்தாளரான வாண்டுமாமாவின் நினைவுகளும் , அவரது படைப்புகளும் என்றென்றும் எம்முடனிருந்து வரும்.

-நன்றி வ.ந.கிரிதரன், 
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2147:2014-06-14-03-59-50&catid=28:2011-03-07-22-20-27

No comments:

Post a Comment